நீலகிரி: தமிழகம் முழுவதும் இன்று (மே 18) முதல் 20ஆம் தேதி வரை அதிகனமழை பெய்யக்கூடும் என்றும், 22ஆம் தேதி வரை தமிழகத்தில் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. அதேபோல, நீலகிரி மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், குன்னூரில் நேற்று (மே 17) இரவு பெய்த மழை 17.1 செ.மீ அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலையில், மூன்று நாட்கள் குன்னூர் பகுதியில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குன்னூருக்கு தமிழக அரசின் மாநில பேரிடர் மீட்பு படையினர் 35 பேர் கொண்ட குழு வருகை தந்துள்ளனர்.
இதுமட்டுமல்லாது, அதிகனமழையில் குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதியில் பேரிடர் ஏற்பட்டால், உடனடியாகச் சென்று மீட்புப் பணியில் ஈடுபடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில மீட்புப் படையினர் 35 பேர் மற்றும் நீலகிரி குன்னூர் பேரிடர் மற்றும் முதல் நிலை பொறுப்பாளர்கள் 30 பேர் என பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்த நிலையில், இவர்களை அனைவரும் குன்னூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் சதீஷ் தலைமையில் கனமழை குறித்து ஆய்வுக் கூட்டம் மற்றும் எந்தெந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பர்லியார் பகுதி முதல் குன்னூர் நகரம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குஞ்சப்பண்ணை வரையிலும், எந்தெந்த பகுதிகளில் மழையினால் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகள் தேவைப்படும் என்று மாநில பேரிடர் மீட்பு படையினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று முதல் மாநில பேரிடர் மீட்பு படையினர் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும், மழை குறையும்பட்சத்தில், மாநில பேரிடர் மீட்பு படையினர் திரும்பப் பெறப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தேனி அணைகளின் நீர்மட்டம் - விவசாயிகள் மகிழ்ச்சி!