சென்னை: 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலவலர் சங்கத்தினர், கடந்த 2023 மே மாதம் சென்னை வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது, வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் அரசு தலைமைச் செயலாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதனைத் தொடரந்து, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியின் படி போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் வாக்குறுதி அளித்தப்படி கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்பதால், தமிழ்நாடு முழுவதும் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட வருவாய்த் துறையில் பணியாற்றும் அலுவலர்கள், ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வரும் 22ஆம் தேதி முதல் அனைத்து பணிகளையும் புறக்கணித்து, அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டம் நடத்தவும், 27ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் முருகையன், “மாநிலம் முழுவதும் அலுவலர்கள் முதல் அலுவலக உதவியாளர்கள் வரையில் தற்செயல் விடுப்பு எடுத்து 16 ஆயிரம் பேர் உண்ணாவிரதம் நடத்தி வருகின்றனர்.
நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக, பணியிறக்கம் பெற்ற அலுவலர்களுக்கான பணி பாதுகாப்பு அரசாணை வெளியிட வேண்டும். இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்றம் தமிழக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டு, கடந்த 8 ஆண்டுகளாக காலதாமதம் செய்யப்பட்டு வருகிறது.
இளநிலை உதவியாளர், தட்டச்சர் ஆகியோருக்கிடையே ஒருங்கிணைந்த முதுநிலை நிர்ணயம் செய்வதில் ஏற்படுத்தப்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்திட, மனிதவள மேலாண்மைத்துறை மூலமாக உரிய தெளிவுரை வழங்கிட வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.
அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மை பணிக்கென சிறப்பு பணியிடங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மைப் பிரிவில் 31.3.2023 முதல் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்கிட வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் உள்ள பயன்பாட்டிற்கு தகுதியற்ற ஈப்புகளை கழிவு செய்து, அவற்றிற்கு ஈடாக புதிய ஈப்புகளை உடனடியாக வழங்கிட வேண்டும்.
2024 நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள, முழுமையான நிதி ஒதுக்கீட்டினை உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நடைபெறும் போராட்டத்தினால் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளது. 22ஆம் தேதி முதல் பணி புறக்கணிப்பு போராட்டமும், 27ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டமும் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட பல பணிகள் உள்ள நிலையில், விரைவில் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். வருவாய்த் துறையும் ஜாக்டோ ஜியோ அமைப்பில் உள்ளோம். எங்களை அழைத்து அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, முதலமைச்சரிடம் கூறி விட்டு கூறுவதாக தெரிவித்துள்ளனர். நாளை மறுநாள் 15ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தினை நடத்துவதற்கு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அமைச்சரின் பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பார்முலா 4 கார் ரேஸ் ஜூன் மாதத்திற்கு பிறகு நடத்தப்படும் - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!