சென்னை: பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் சாதி, இன உணர்வுகளால் உருவாக்கும் வன்முறைகளை தவிர்க்கவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் வழிவகுத்திட அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு குழு தனது அறிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் அளித்துள்ளது. இதில் 650 பக்கம் கொண்ட அறிக்கையில் 14 அத்தியாயங்களும், 6 இணைப்புகளும் இடம் பெற்றுள்ளன. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தீர்க்க வேண்டிய 20 உடனடி பரிந்துரைகளும், 3 நீண்ட காலத்தில் தீர்க்க வேண்டிய பரிந்துரைகளும் இதில் அடங்கியுள்ளது.
சந்துருவின் குழு அளித்துள்ள பரிந்துரையில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பாடப்புத்தகங்களில் சமூக நீதி, சாதியால் வரக்கூடிய ஏற்றத்தாழ்வுகள் குறித்த பாடங்களை புதிதாக சேர்க்க வேண்டும். பள்ளி வகுப்பறைகளில் அகர வரிசைப்படி மட்டுமே மாணவர்களை அமர செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அகரவரிசையில் அமராமல் முன் வரிசையில் அமர்வதற்கு அனுமதிக்கலாம். ஆனால் அவர்களின் பெயர் வருகைப் பதிவேட்டில் அகர வரிசைப்படியே இருக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.
மேலும், ''பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் சாதிப் பெயர்களை வருகை பதிவேடுகளில் குறிப்பிடக் கூடாது. மாணவர்களின் சாதி பதிவை கொண்டிருக்கக்கூடிய ஆவணங்களை அந்தந்த கல்லூரி மற்றும் பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் உரிய உயர் அதிகாரிகள் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்து மாணவர்களை தலைமை ஆசிரியர் தமது அறைக்கு அழைத்து மட்டுமே கூற வேண்டும். இதனை மீறும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, '' மாணவர்கள் வண்ண கயிறுகளை கட்டுவது, மோதிரங்கள், நெற்றில் பொட்டு வைத்து வருவதை தவிர்க்க வேண்டும். மிதிவண்டிகளில் அவர்களின் சாதியை குறிக்கும் வகையில் பெயிண்ட் அடிக்கக்கூடாது என்றும், அதனை மீறினால் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தி அறிவுரை வழங்க வேண்டும்'' எனவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், '' ஒவ்வொரு கல்வியாண்டிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பயிற்சி பெற்ற வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களை கொண்டு கட்டாயம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆண்டுத்தோறும் தேர்தல் வைத்து மாணவர்கள் தலைவரை தேர்வு செய்ய வேண்டும். பள்ளிகளில் செல்போன் உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பதினோராம் வகுப்பில் கணிதம், அறிவியல் பாடப் பிரிவில் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கென தனி இடஒதுக்கீடு கொண்டுவர அரசு ஆவணம் செய்ய வேண்டும்''.
''6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அறநெறி வகுப்பினை கட்டாயமாக்க வேண்டும். பள்ளிகளில், கல்லூரிகளில் சமூக நீதி மாணவர் படையை ஏற்படுத்த வேண்டும். அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய வகையில் இந்த படை அமைக்கப்பட வேண்டும். அனைத்து சாதி மாணவர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கக்கூடிய வகையில் இந்த படை அமைக்கப்பட்டு ஏற்றத் தாழ்வில்லா பள்ளி மற்றும் கல்லூரி வளாகம் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்'' என நீதிபதி சந்துரு குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கல்லூரி முதல்வர் பணியிடங்கள் பல மாதங்களாக நிரப்பப்படாதது ஏன்? - தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி