சென்னை: நாட்டின் 75வது குடியரசு தினம் இன்று (ஜன.26) நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா, கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சுமார் 7:50 மணியளவில் வருகை தந்தனர்.
பின்னர், ஆளுநர் ஆர்.என்.ரவி 8:00 மணியளவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த குடியரசு தினவிழா அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். இந்த குடியரசு தினவிழாவில் ஆளுநர் தேசிய கொடியேற்றும் போது ஹெலிகாப்டரில் இருந்து ரோஜா பூ இதழ் தூவப்பட்டன. இதைத்தொடர்ந்து, அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முப்படை வீரர்கள், காவல்துறையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், தேசிய மாணவர் படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். இதன் தொடர்ச்சியாக விளையாட்டு, வேளாண்மை, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் உட்பட தமிழக அரசின் சாதனையை விளக்கும் துறைசார்ந்த 22 அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து அரசுப் பள்ளி , அரசு கல்லூரி மாணவிகள் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவிகளின் தமிழக பாரம்பரிய கலை கலைநிகழ்ச்சி நடைபெற்றது. ஒடிசா மற்றும் மணிப்பூர் மாநில பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனிடையே, இவ்விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், சிறப்பு அழைப்பாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடும்பத்துடன் பங்கேற்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கோட்டை நல்லிணக்க விருது, கள்ளச்சாராயம் ஒழிப்பதற்கான காவலர்களுக்கு விருது, மதுரை அரசுப் பள்ளிக்கு நிலம் தானமாக வழங்கிய ஆயி பூரணம் அம்மாள் உள்ளிட்டோருக்கு விருது வழங்கி கவுரவித்தார்.
வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம்
தூத்துக்குடி மாவட்டம் யாசர் அரபாத்,
திருநெல்வேலி மாவட்டம் டேனியல் செல்வசிங்,
தூத்துக்குடி மாவட்டம் சிவகுமார்
- கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் - கிருஷ்ணகிரி மாவட்டம் முகமது ஜூபேர்
- அதிக உற்பத்தி திறன் பெரும் விவசாயிக்கான வேளாண்மை துறை சிறப்பு விருது - சி.நாராயணசாமி நாயுடு
- உற்பத்தி திறனுக்கான விருது - சேலம் மாவட்டம் பாலமுருகன்
- முதலமைச்சர் சிறப்பு விருது - மதுரை மாவட்டம் ஆயி அம்மாள் என்கிற பூரணம்
காந்தியடிகள் காவலர் பதக்கங்கள்
- விழுப்புரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய்
- சென்னை மாவட்டம் மத்திய நுண்ணறிவு பிரிவு தெற்கு காவல் துணை கண்காணிப்பாளர் காசி விஸ்வநாதன்
- மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் முனுசாமி
- ராணிப்பேட்டை மத்திய பிரிவு தலைமை காவலர் ரங்கநாதன்
சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் விருது
- முதல் பரிசு - மதுரை மாநகரம்
- இரண்டாம் பரிசு - நாமக்கல் மாவட்டம்
- மூன்றாம் பரிசு - திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை
காமராஜர் சாலையில் குடியரசு தின விழாவை பொதுமக்கள் காண்பதற்கு வசதியாக இரு புறங்களும் தடுப்புகள் அமைக்கப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: LIVE: 75வது குடியரசு தின விழா: சென்னையில் கொடியேற்றும் ஆளுநர், விருது வழங்கும் முதலமைச்சர்!