தஞ்சாவூர்: கும்பகோணம் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழக சாலை சந்திப்பில், இன்று (மே 4) திடீரென சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் மாநகராட்சி அதிகாரிகள், ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பள்ளத்தைச் சீரமைத்து வருகின்றனர்.
கும்பகோணம் ஹாஜியார் தெரு, பழைய மீன் அங்காடி அருகேயுள்ள தஞ்சாவூர் - மயிலாடுதுறை பிரதான சாலையின் கீழே ஒன்றரை மீட்டர் ஆழத்தில், சாஸ்வதி பாடசாலை அருகேயுள்ள மாநகராட்சி பம்பிங் ஹவுஸ் முதல் கரிக்குளம் மாநகராட்சி குப்பை கிடங்கு வரை 700 எம்எம் அளவிற்கு கழிவுநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.
இந்த குழாயில் இன்று திடீரென வெடிப்பு ஏற்பட்டதால், 10 அடி நீளம் 5 அடி அகலத்திற்கு சாலையில் பள்ளம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார், அப்பகுதியில் போக்குவரத்தை உடனடியாக தடை செய்தனர். மேலும், மாநகராட்சி பாதாளச் சாக்கடை மேற்பார்வையாளர் கிட்டா தலைமையிலான மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சம்பவயிடத்திற்கு வந்து, பொக்லைன் இயந்திர உதவியுடன் பாதாளச் சாக்கடை குழாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சாலையை சில அடி நீளம் மற்றும் அகலத்திற்கு தோண்டி, சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சாலையில் திடீரென எற்பட்ட இந்த பள்ளத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கும் முன்பு, இதே சாலையில் இரண்டு இடங்களில் இவ்வாறான கழிவுநீர் குழாய் வெடிப்பு ஏற்பட்டு பின் சீரமைக்கப்பட்டது.
இதையடுத்து குழாய் வெடிப்பிற்கான முக்கிய காரணம் குறித்து விசாரிக்கையில், கடந்த 2000-ம் ஆண்டு, சாலையில் இருந்து ஒன்றரை மீட்டர் ஆழத்தில் புதைக்கப்பட்டுள்ள இந்த குழாயின் ஆயுட்காலம் முடிந்து விட்டது தெரிய வந்துள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாகவே ஆங்காங்கே குழாய் வெடிப்பு ஏற்படுவதும், சாலையில் திடீர் பள்ளம் ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம், முழுமையாக பழைய பாதாளச் சாக்கடை குழாய்களை அப்புறப்படுத்திவிட்டு, புதிய குழாய்களைப் பதிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.