சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி (மார்ச் 16) இன்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்படி, தமிழகத்தில் 2024 மக்களவைத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் மார்ச் 27ஆம் தேதி முடிவடைகிறது. வேட்பு மனு மீதான பரிசீலனை மார்ச் 28ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி மார்ச் 30ஆம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின், ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவும், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதனால் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தித்துறை இயக்குநர் வைத்தியநாதன், தமிழக அரசின் சாதனைகள், திட்ட விழாக்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு இருந்ததை எடுக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.
இதைத் தொடர்ந்து, செய்தி-மக்கள் தொடர்பு அதிகாரி முத்தமிழ் செல்வன் தலைமையில், புகைப்படப் பிரிவு ஊழியர்களைக் கொண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படம் உள்பட அனைத்து தமிழக முன்னாள் முதலமைச்சர்களின் புகைப்படங்கள் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம், தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படங்கள் மற்றும் தமிழக அரசு சார்பாக நடத்தப்பட்ட திட்ட விழாக்களின் புகைப்படங்கள் என அனைத்தும் இன்று மாலை 4 மணியளவில் முழுமையாக நீக்கப்பட்டது.
அதேபோல், ஈரோட்டிலுள்ள தலைவர்களின் பெயர் மற்றும் சிலைகளை மறைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். இதேபோல் தமிழ்நாடு முழுவதும் உள்ள தலைவர்களின் சிலைகள், அரசு அலுவலகங்களில் உள்ள புகைப்படங்கள், கட்சிக் கொடிக் கம்பங்கள், போஸ்டர்கள் ஆகியவற்றை மறைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: 7 கட்டங்களாக நடக்கிறது நாடாளுமன்ற தேர்தல்.. தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு எப்போது?