திருச்சி : ஃபெஞ்சல் புயல் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் ஆகிய 4 மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்தன.
அதிலும், விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது. மழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். தற்போது வரை விழுப்புரம் மாவட்டத்தில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு பணிகளை மேற்கொள்வதற்காகவும், தூய்மை பணிகளை மேற்கொள்வதற்காகவும், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் திருச்சி மாவட்டத்தில் இருந்து விழுப்புரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் நிவாரண பொருட்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கொடியசைத்து அனுப்பி வைத்தார். 268 தூய்மை பணியாளர்கள் மற்றும் 138 தூய்மை காவலர்கள் ஆகியோர் பேருந்துகள் மூலமாக நிவாரண பணிகளை மேற்கொள்ள விழுப்புரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உணவு பொட்டலங்களை சாப்பிட்டு பார்த்தும், பாதுகாப்பாக வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அறிவுரை வழங்கினார்.
இதையும் படிங்க : ஃபெஞ்சல் புயல், மழை பாதிப்பு: குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 நிவாரணம் அறிவித்தது தமிழக அரசு!
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், "6 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் திருச்சியில் தயார் செய்யப்பட்டு விழுப்புரத்திற்கு அனுப்பப்படுகின்றது. மாவட்ட நிர்வாகம் சார்பில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் உணவு பொட்டலங்கள் திருச்சியில் இருந்து தயார் செய்து அனுப்பி வைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றது. அரிசி, பருப்பு, மசாலா பொருட்கள் அடங்கிய தொகுப்பு (10 ஆயிரம் பைகள்) விழுப்புரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், தூய்மை பணிகளை மேற்கொள்ள 250 தூய்மை பணியாளர்கள் செல்கின்றனர். அதுமட்டுமின்றி அவர்களுக்கு தேவையான பெட்ஷீட், தேவையான உபகரணங்கள் போன்றவற்றை எடுத்து செல்கின்றனர். தொடர்ந்து உணவு பொட்டலங்கள் தயார் செய்து அனுப்பப்படும். இதே போன்று மாநகராட்சி சார்பிலும் உணவு பொட்டலங்கள் தயார் செய்து அனுப்பும் பணிகளும் நடைபெற்று வருகின்றன" என தெரிவித்தார்.