மதுரை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் அம்மன்கோவில் காலனி தெரு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து - மாரியம்மாள் என்பவரின் மகன் அழகேந்திரன் (21). இவர் படித்து முடித்துவிட்டு வேலை தேடிவந்துள்ளார். இதனிடையே அழகேந்திரன் அதே பகுதியில் வசிக்கும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை அழகேந்திரன், மதுரை கள்ளிக்குடியில் உள்ள தனது உறவினரான அழகர் என்பவர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அழகேந்திரன் காதலிப்பதாக கூறப்படும் பெண்ணின் மாமன் மகன் பிரபாகரன் என்பவர் அழகேந்திரனின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தனியாக பேச வேண்டும் எனக் கூறி பைக்கில் அழைத்துச் சென்றதாக அழகேந்திரனின் உறவினர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்ற மகன் வீடு திரும்பவில்லை என அழகேந்திரனின் தாயார் அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் சம்பந்தப்பட்ட கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என காவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், அழகேந்திரனின் பெற்றோர் உடனடியாக கள்ளிக்குடி காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர்.
இதனிடையே செவ்வாய்கிழமை, கள்ளிக்குடி அருகே வேலாம்பூர் கண்மாயில் அழகேந்திரன் தலை துண்டாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதாக அவரது தாயாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த கொலை வழக்கில் அழகேந்திரனை அழைத்துச் சென்ற பிரபாகரனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அழகேந்திரனின் உடலானது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைகாக கொண்டு வரப்பட்டுள்ளது. தனது மகன் காதலிப்பதாக கூறிய பெண்ணின் உறவினர்கள் தனது மகனை ஆணவ படுகொலை செய்து விட்டதாக கூறியும் அழகேந்திரனின் தாயார் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்டோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து, அழகேந்திரனின் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது இளைஞரின் ஆணவ படுகொலைக்கு காரணமான உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனவும், ஆணவ படுகொலை குறித்து வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும் எனவும் வழக்கின் திசையை மாற்றும் வகையில் காவல்துறையினர் செயல்படுவதாகவும் கூறி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மகனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்: ஈ.டிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் பேசிய அழகேந்திரனின் தாயார் மாரியம்மாள், "எனது மகனை பிரபாகரன் தனியாக அழைத்துச் சென்ற நிலையில் காலையில் கொலை செய்து விட்டதாக தகவல் வந்தது எனவும், ஆனால் காவல்துறையினர் தற்போது வரைக்கும் தனது மகனுடைய உடலை பார்க்க அனுமதிக்கவில்லை என தெரிவித்தார். தனது மகன் எப்படி இறந்தான் என்பது கூட தெரியவில்லை எனவும் எனவே எனது மகனை கொலை செய்த உண்மையான குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இது தொடர்பாக பேசிய தமிழ் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பேரறிவாளன், "இளைஞர் அழகேந்திரன் ஆணவ படுகொலை செய்யப்பட்டுள்ளார். எனவே உண்மை குற்றவாளிகளை கைது செய்து ஆணவ படுகொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கு விசாரணையை போலீசார் திசை திருப்ப முயற்சி மேற்கொள்கின்றனர்.
சிபிசிஐடி விசாரணை வேண்டும்: ஆகையால், தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். ஆணவ படுகொலையை ஓரிருவர் நிகழ்த்த முடியாது. அழகேந்திரன் காதலித்த பெண்ணின் பெற்றோரையும் கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும் சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்" என வலியுறுத்தினார்.
அழகேந்திரனை ஆணவ படுகொலை செய்ததாக கூறி உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி அழகேந்திரனின் குடும்பத்தினர் மற்றும் தமிழ் புலிகள் கட்சியினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து உடலை வாங்க மறுத்து தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.