புதுக்கோட்டை: திருகோகர்ணம் இடத்தெருவைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் பிரகாஷ்(26), இவர் தினசரி காலை வேளையில் வீடு வீடாகச் சென்று பேப்பர் போட்டு விட்டு, அதன் பின்னர் திலகர் திடல் அருகே உள்ள தனியார் மாட்டுத்தீவன கடையில் பணியாற்றி வந்துள்ளார். இதற்கிடையே, பிரகாஷ் அதே பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் கடந்த 5 ஆண்டுகளாக பராமரிப்பு பணியைச் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், கோயில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து குடிசை கட்டியதாகவும், அதனை தட்டிக் கேட்டு பிரகாஷ் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. அதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரனின் மகன் பிரதீப் (28) தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 24ஆம் தேதி இரவு நேரத்தில் அரிவாளுடன் பிரகாஷ் வீட்டிற்குச் சென்று "கொலை செய்துவிடுவேன்" என மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஜூன் 25ஆம் தேதியே திருக்கோகர்ணம் காவல்நிலையத்தில் பிரகாஷ் புகார் அளித்துள்ளார். ஆனால், இதுதொடர்பாக போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், நேற்று மதியம் வழக்கம்போல் பிரகாஷ், திலகர் திடல் பகுதியில் நகராட்சி அரசு தொடக்கப் பள்ளிக்கு எதிரே உள்ள தனியார் மாட்டுத் தீவன கடையில் பணியாற்றிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் 3 பேருடன் வந்த பிரதீப், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரகாஷை கடை முன்பாக வைத்து தலை மற்றும் கழுத்துp பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர், பிரகாஷின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை காப்பாற்றியதோடு, போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகலின் அடிப்படையில் வந்த போலீசார், ஆம்புலன்ஸ் மூலம் பிரகாஷை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரகாஷ் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், புதுக்கோட்டை - தஞ்சாவூர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த கணேஷ் நகர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்திக் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், "குற்றவாளியைக் கைது செய்யும் வரை மறியலைக் கைவிடமாட்டோம்" எனத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, தஞ்சாவூர் அண்டாக்குளம் விளக்கு ரோட்டில் உயிரிழந்த இளைஞரின் நண்பர்கள், இருசக்கர வாகனங்களை வைத்து சாலையை மறைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த புதுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் ராகவி, சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார். ஆனால், இளைஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளாக மாறியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது.
அப்போது பேசிய போலீசார், குற்றம் சுமத்தப்பட்டவரின் பெற்றோரை கைது செய்துள்ளதாகவும், குற்றவாளியையும் விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுப்போம் எனவும் உறுதியளித்தனர். அதனால் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உயிரிழந்த பிரகாஷின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த நிலையில், நேற்று இரவு கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட பிரதீப்பின் வீட்டில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் மேலும் பதற்றம் அதிகரித்தது. பின்னர் தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாகப் போராடி, தீயை அணைத்தனர். ஆனால், வீட்டின் மொட்டை மாடியில் தார் சீட்டு போட்டு வைக்கோல் வைத்திருந்த பகுதியில் தீ பிடித்ததால், வீட்டிலிருந்த ஏசி, வாட்டர் டேங்க், பிரிட்ஜ், பீரோ உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது.
பின்னர், இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், பிரதீப் வீட்டிற்கு மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, அப்பகுதியில் அடுத்தடுத்து பதற்றமான சூழல் நிலவுவதால், பாதுகாப்புக்காக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.