திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மோட்டூரைச் சேர்ந்தவர் வேண்டாம்மாள் (42). இவருக்கு தைராய்டு நோய் உள்ள நிலையில், ஆம்பூர் உமர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் ராம் திலக் என்ற மருத்துவர், வேண்டாம்மாளுக்கு தைராய்டு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
இந்நிலையில், தைராய்டு அறுவை சிகிச்சை முடிவுற்ற பின்னர் வேண்டாம்மாள் மயக்க நிலையிலே இருந்ததால், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேண்டாம்மாளை ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த அரசு மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனால், வேண்டாம்மாளுக்கு அறுவை சிகிச்சை செய்த தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் நகர போலீசார், உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து வேண்டாம்மாளுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக தனியார் மருத்துவமனை மருத்துவர் மீது வேண்டாம்மாளின் உறவினர்கள் ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில், ஆம்பூர் நகர போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து வேண்டாம்மாளுக்கு அறுவை சிகிச்சை செய்த தனியார் மருத்துவமனை மருத்துவர் ராம் திலக் கூறுகையில், “வேண்டாம்மாள் கடந்த சில தினங்களாக தைராய்டு நோயால் அவதியுற்று தங்களது மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தார் இந்நிலையில் இன்று வேண்டாம்மாளுக்கு அறுவை சிகிச்சை செய்து தைராய்டு கட்டியை வெளியே எடுத்த பின்னரும், அவர் சிறிது நேரம் மயக்க நிலையிலேயே இருந்ததால், உடனடியாக நானும், சக மருத்துவரும் அவரை வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்.
அங்கு அவரை அரசு மருத்துவர்கள் பரிசோதித்த பின்னரே அவர் உயிரிழந்ததாக தெரிவித்தார். மேலும், உடற்கூறு ஆய்வு முடிவு வந்த பின்னரே வேண்டாம்மாள் எப்படி இறந்தார் என தெரிய வரும்” என்று ராம் திலக் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 10ம் வகுப்பு தேர்வில் சாதித்த மாணவிக்கு பாராட்டு விழா! - TN SSLC RESULT