தருமபுரி: தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கோயில்களிலும், ஒவ்வொரு ஆண்டும் ஆடித் திருவிழா கோலாகலமாக நடைபெறும். அதன்படி, ஆடி மாதம் பிறந்தவுடன் கோயில்களில் கொடியேற்றப்பட்டு கொடை திருவிழாக்கள் நடைபெறும். சில கோயில்களில் இரண்டு முதல் 10 நாட்கள் வரை திருவிழாக்கள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருவிழாக்கள் கொண்டாடப்படும்.
அந்த வகையில், தருமபுரி மாவட்டம், இண்டூர் அடுத்த நடப்பனஹள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது பெரிய கருப்பசாமி திருக்கோயில். இக்கோயிலில் ஆடி அமாவாசையான இன்று (ஆக 4) மூலவர் கருப்பசாமிக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
மூலவர் கருப்பசாமிக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழி பலியிட்டு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். இக்கோயிலில் அருள்வாக்கு சொல்லும் பூசாரி வெள்ளை குதிரையில் ஊர்லமாக வந்து கத்தி மீது நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.
அருள்வாக்கு கேட்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களிலிருந்து சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் வருகைபுரிந்து அருள்வாக்கு கேட்டனர். பின்னர் முக்கிய நிகழ்ச்சியான பூசாரி மீது மிளகாய் கரைசல் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
9 அண்டாக்களில் வைக்கப்பட்டிருந்த 108 கிலோ மிளகாய் தூள் கரைசலை கோயில் பூசாரி மீது ஊற்றி அபிஷேகம் செய்தனர். இந்நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர். இக்கோயிலில் கடந்த 9 ஆண்டுகளாக ஆடி அமாவாசை அன்று கோயில் பூசாரிக்கு மிளகாய் கரைசல் அபிஷேகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: செல்லியம்மன் கோயில் ஆடித் திருவிழா; தடபுடலாக நடந்த அசைவ விருந்து! - Aadi Festival