சென்னை: பொது சுகாதாரத்துறை இயக்குனரகத்தின் கீழ் 332 ஆய்வக நுட்புனர்கள் (நிலை-3) காலி இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு இன்று (பிப்.21) நடைபெறும் என பொது சுகாதாரத்துறை இயக்குனராகம் அறிவித்துள்ளது.
இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பொது சுகாதாரத்துறை இயக்குநரால் அறிவிக்கப்பட்ட 332 ஆய்வக நுட்புனர்கள் (நிலை-3) காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் கல்வித்தகுதி மதிப்பெண் அடிப்படையில் வழங்கப்பட்ட தகுதியானவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு செய்து முடிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், தகுதியானவர்களின் பட்டியல் கடந்த 19ஆம் தேதி மருத்துவப்பணிகள் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. இந்த தகுதியுள்ள ஆய்வக நுட்புனர்களுக்கு பொது கலந்தாய்வு அடிப்படையில் பணியிடங்களை தேர்வு செய்ய இன்று சென்னை எழும்பூர் குடும்பநல பயிற்சி மையத்தில் பொது கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
தேர்வு செய்யப்பட்டுள்ள 286 நபர்களுக்கும், 19ஆம் தேதி பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை மூலமாக, பொது கலந்தாய்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பு தொலைபேசி மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டது. மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட பட்டியலின்படி மட்டுமே பொது கலந்தாய்வு இன்று காலை 8.30 மணியளவில் நடத்தப்படும்.
கலந்தாய்வின் போது தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் அனைத்து நபர்களும் பணி ஆணை வழங்கப்பட்ட 15 நாட்களுக்குள் பணியில் சேர வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள், கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும்போது தங்கள் மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய தரவரிசை விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
www.tndphpm.com என்ற இணைய தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள 483 காலிப் பணியிடங்களில் இருந்து
காலிப் பணியிடங்களைத் தேர்வு செய்யலாம். காலிப்பணியிடங்களின் இருப்பிடங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் தொடர்பு விவரங்கள் www.tndphpm.com இணைய தளத்தில் பார்த்து கொள்ளலாம்.
கலந்தாய்வு நடைமுறையினை விரைவாகவும், எந்த வித இடர்பாடுமின்றி செயல்படுத்தி, தங்களுக்கான இடத்தினை தேர்ந்தெடுத்திட தயாராக வர வேண்டும். கலந்தாய்வுக்கான உத்தேச நேர இடைவேளை, தொகுதி விவரங்களுடன் 483 காலிப் பணியிடங்களின் நகல், கலந்தாய்வு மையத்தில் முகப்பு பகுதியில் ஒட்டப்படும். விண்ணப்பதார்கள் கலந்தாய்வு மையத்திற்கு காலை 8.30 மணிக்கு வர வேண்டும்.
அழைக்கப்படும்போது ஒரு குறிப்பிட்ட நபர் இல்லையெனில் அடுத்த நபர் அழைக்கப்படுவார். தனியரால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வே இறுதியானது. அதன் அடிப்படையில், தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்திற்கான நியமன ஆணைகள் வழங்கப்படும். நியமனத்தில் மாற்றம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அதுவே இறுதியானது.
தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள தவறினாலோ, கலந்தாய்வின்போது எந்த குறிப்பிட்ட இடத்தையும் தேர்வு செய்யவில்லை என்றாலோ, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் உள்ளபடி அவர்கள் வசிக்கும் மாவட்டத்தின் அடிப்படையில் காலியிடங்களில் நியமன ஆணைகள் வழங்கப்படும்.
பொதுக் கலந்தாய்வில் பங்கேற்ற அனைத்து ஆய்வக நுட்புனர்களுக்கும் நாளை (பிப்.22) காலை 8 மணியளவில் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை கூட்ட அரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரால் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2024: கவனத்தை ஈர்த்த முக்கிய அறிவிப்புகள்!