சென்னை: இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில், “தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களில் 1,500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பிக் கொள்ளவும், தொடக்கக்கல்வி இயக்குநருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்படி இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அரசுத் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பிடும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை வகுத்து அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், பள்ளிக்கல்வி இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளில் உள்ள அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் பணிநாடுநர்களிடமிருந்து நேரடி நியமனம் செய்யும்போது பின்பற்ற வேண்டிய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் பணிநாடுநர்களிடமிருந்து நேரடி நியமனம் செய்யும்போது பின்பற்ற வேண்டிய கால அட்டவணை வெளியிடப்படுகிறது.
கல்வியாண்டில் பள்ளிகள் துவங்கிய பின்னர் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையை ஆகஸ்ட் 1ஆம் தேதி நிலவரப்படி, பணியாளர் நிர்ணய அறிக்கையின்படி இடைநிலை ஆசிரியர் உபரி பணியிடங்களை கண்டறிந்து கணக்கீடு செய்யும் பணியை, மே 1ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அதன் அடிப்படையில், உபரி இடைநிலை ஆசிரியர்களை தேவையுள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் மே 31ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும். அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஜூன் 30ஆம் தேதிக்குள் நடத்தி முடித்திட வேண்டும்.
இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிட விவரங்களை ஜூலை 1ஆம் தேதிக்குள் கணக்கிட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு, அனுமதி பெறுவதற்கு ஜூலை 15ஆம் தேதிக்குள் அரசுக்கு கருத்துருக்கள் அனுப்பப்பட வேண்டும். அரசு அதன் அடிப்படையில், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அனுமதி வழங்கி அரசாணையை வெளியிட வேண்டும்.
ஆசிரியர் தேர்வு வாரியம் நேரடி நியமனம் செய்வதற்கான உத்தேசப் பணியிடங்களின் விவரங்களுடன், அறிவிப்பை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஜனவரி 31ஆம் தேதிக்குள் தேர்வு நடத்தப்பட வேண்டும். தேர்வுகளின் முடிவுகளை ஏப்ரல் 4ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதிப் பட்டியலை மே 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதிக்குள் வழங்கிட வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாளை மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்த SSTA!