திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி மேயராக இருப்பவர் சரவணன். ஆளுங்கட்சியான திமுகவைச் சேர்ந்த சரவணன், அக்கட்சியின் தலைமை ஆதரவோடு மேயராக நியமிக்கப்பட்டார். ஆனால், அப்போது திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலாளராக இருந்த அப்துல் வகாப் ஆதரவு கவுன்சிலர்களுக்கும், மேயருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
தொடர்ந்து, மோதல் நீடித்து வந்த நிலையில், மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக கடந்த இரண்டு தினங்களாக தகவல்கள் பரவி வந்தன. குறிப்பாக, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சி மேயர்கள் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகின.
இந்த நிலையில், இன்று கோயம்புத்தூர் மேயர் கல்பனா ஆனந்த் அதிகாரப்பூர்வமாக தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கியிருந்தார். இந்நிலையில், கோவையைத் தொடர்ந்து திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணனும் தற்போது மெயில் மூலமாக தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவுக்கு அனுப்பியதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து தெரிந்து கொள்வதற்காக மாநகராட்சி ஆணையரை தொடர்பு கொண்ட போது அவர் பதில் அளிக்கவில்லை. இருப்பினும், உறுதியாக மேயர் ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாக தெரிய வந்துள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் அடுத்தடுத்து ஆளுங்கட்சியைச் சேர்ந்த இரண்டு மேயர்கள் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோவை மாநகராட்சி திமுக மேயர் கல்பனா ஆனந்த் ராஜினாமா.. பின்னணியும் சர்ச்சைகளும்!