தேனி: கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக தேனி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ.பி.ரவிந்திரநாத் தனது பதவி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் பற்றி கூறி, பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கவும் விதமாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "2019ஆம் ஆண்டு நடந்த நாட்டின் 17வது நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் நாம் மட்டும் தான். இதற்காக என்னை ஆதரித்து வாக்களித்த மக்களுக்கு நன்றி. மேலும், தொகுதி மேம்பாட்டிற்காக செய்த பணிகள் குறித்து கூறுவது என்னுடைய கடமை.
அந்தவகையில், தொகுதி மேம்பாட்டு நிதி 17 கோடியே 7 லட்சத்து 91 ஆயிரம் 88 ரூபாய் மதிப்பீட்டில் 159 பணிகள் நிறைவேற்றப்பட்டு, அதில் 127 பணிகள் முடிக்கப்பட்டு, மீதமுள்ள 37 மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. மேலும், தமிழகத்தில் ரயில் சேவையில்லாத மாவட்டமாக தேனி இருந்தது.
இது குறித்து, பிரதமர் மோடி மற்றும் ரயில்வேத்துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று 403 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தேனி - மதுரை இடையேயான ரயில் பாதை பணிகள் நிறைவேற்றப்பட்டது. தற்போது, போடி - சென்னை இடையே மாதத்திற்கு 13 முறை அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட்டு 2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "தேனி மாவட்டத்தில் கேந்திர வித்தியாலயா பள்ளி அமைக்க 24 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு வட வீரநாயக்கன்பட்டியில் 8 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும், ஜல் ஜீவன் திட்டத்தில் 106.20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு மக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மருத்துவ நிவாரண நிதி, கிராம சாலைகள், தூய்மை பாரத திட்டத்தின் கீழ் மக்களுக்கு கழிப்பிடம் கட்டி தர உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகளுக்காக மத்திய அரசிடம் இருந்து, சுமார் 850 கோடி ரூபாய் வரை நிதி பெறப்பட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பணிகளை மேற்கொள்ள மக்கள் எனக்கு வாய்ப்பளித்தற்கு நன்றி" எனப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, தற்போது அமைக்கப்பட்டுள்ள கூட்டணி மூலம் திமுகவை வெல்ல முடியுமா என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, "2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக சொன்ன வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு கொண்டுவரப்படும் எனக் கூறிய திமுக தமிழகத்தில் மது கொள்ளையை நடத்தி வருகிறது" என சாடினார்.
மேலும் பேசிய அவர், "திமுகவிற்கு வாக்களிப்பதன் மூலம் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. மேலும், தேனியில் டிடிவி தினகரனும், ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வமும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்பது உறுதி. இந்தியாவில் 400க்கும் மேற்பட்ட தொகுதிகளுடன் பாஜக அரசு வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சி அமைப்பார்" எனக் கூறினார்.
பின்னர் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து எழுப்பிய கேள்விக்கு, "கட்சி துவங்கும் முன்னதாகவே நடிகர் விஜய் பல நலத்திட்டங்களை மக்களுக்கு செய்து வந்தார். தற்போது அரசியல் கட்சி துவங்கியுள்ளார். மக்களுக்கு நல்ல ஒரு பாதையை அமைத்தால் அவருடன் சேர்ந்து பணியாற்ற நாங்கள் தயார்" என்று கூறினார்.'
இதையும் படிங்க: வாக்கு வங்கிக்காக பிரதமர் குறித்து திமுக அவதூறு பரப்புகிறது: ஜி.கே.வாசன் சாடல்!