மதுரை: மதுரை அதிமுக மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்டப்பட்ட சமயநல்லூர் பகுதியில் விஷசாராயம் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.பி.உதயகுமார், "விஷச் சாராயத்தால் உயிர் பலி நிகழ்ந்ததைக் கண்டித்து திமுக பதவி விலக வேண்டும். மக்களை திசை திருப்ப அதிகாரிகளை பழி வாங்குகிறார்கள். 8 ஆண்டாக அதிமுக மின் கட்டணம் உயர்த்தவில்லை. இப்போது மின் கட்டணத்தை ஆளும் கட்சி உயர்த்தி இருப்பது மக்களுக்கு வேதனையளிக்கிறது. இதை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளோம்" என்று தெரிவித்தார்
தொடர்ச்சியாக சசிகலா சுற்றுப்பயணம் குறித்த கேள்விக்கு, "கறந்த பால் மடி புகாது. கருவாடு மீனாகாது. எடப்பாடி நான்கரை ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி நடத்தினார். உள்ளடி வேலையின் காரணமாக மீண்டும் எடப்பாடி முதல்வராக வர முடியவில்லை. அதைத் தொடர்ந்து பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்ந்தெடுக்கப்பட்டு அதிமுக தொண்டர்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறார்கள்.
சிலர் தங்களது பின்புலத்தைக் காட்டி தங்களை வளர்த்துக் கொண்டாரே தவிர, சாமானிய தொண்டனுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்கவில்லை. சசிகலாவின் சுற்றுப்பயணம் சுற்றுலாப் பயணமாக தான் இருக்கும். சசிகலாவின் சுற்றுப்பயணம் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்தது போல் தான்.
அவர்கள் நினைத்திருந்தால் ஏழை எளிய மக்களுக்கு ஏதாவது செய்திருக்கலாமே. எதுவும் செய்யாமல் அவர்களுக்கு அதிகாரம் எப்படி மையம் கொண்டிருந்தது? எங்களுக்கு எல்லாம் தெரியும். அவர்களால் வாழ்வு பெற்றவர்கள் ஏதாவது பட்டியலிட்டு சொல்லட்டும் பார்க்கலாம்.
அதிமுக சட்ட விதிப்படி பொதுக்குழு தான் தீர்மானிக்கும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டாமா? தேர்தல் ஆணையத்தை மதிக்க வேண்டாமா? அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன், விலகுகிறேன் என்று அவர் தான் சொன்னார். இப்போது அரசியலில் குதிக்கின்றேன் என்கிறார். எதை எடுத்துக்கொள்வது?
அதிமுக தொண்டர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தருணம் இது. உள்ளடி வேலைகளின் காரணமாக அதிமுக ஆட்சியை இழந்தது. 33 ஆண்டு காலம் ஜெயலலிதாவுடன் இருந்து ஆட்சி நிர்வாகத்தை கவனித்ததாக சொல்லிக் கொண்டிருக்கிறார் சசிகலா. அவர் சார்ந்த சமூக மக்களுக்காக ஏதாவது செய்ததாக சசிகலாவால் சொல்ல முடியுமா? ஜெயலலிதாவின் பின்புலத்தைக் காட்டி தன்னைத்தான் வளர்த்துக் கொண்டார் சசிகலா. அதுதவிர மக்களுக்கு எதுவும் அவர் செய்ததில்லை" என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க: ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு விநியோகத்தில் தாமதம்? - அமைச்சர் பெரியகருப்பன் பதில்!