விழுப்புரம்: வன்னியர் சங்கத்தின் 45வது ஆண்டு விழாவையொட்டி திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வன்னியர் சங்க கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “வன்னியர் சங்கம் 1980 ஜூலை 20-ல் தொடங்கப்பட்டது. அதன் முதல் கோரிக்கையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தமிழ்நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. அந்த வகையில், வன்னியர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.
இடஒதுக்கீடு கிடைப்பதற்காக சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். கடந்த அதிமுக ஆட்சியின் போது 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என முதலமைச்சரை கோட்டையில் நான் நேரில் சந்தித்து முறையிட்டும் இன்று வரை நிறைவேறவில்லை.
போராட்டம்: இட ஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம் நடத்தப்படும். முன்னதாக 7 நாட்கள் நடத்திய சாலை மறியலை விட மிகப்பெரிய போராட்டமாக இருக்கும். கடுமையான போராட்டத்தை நடத்தினால் தான் இந்த அரசு கொடுக்கும் அல்லது பணியும் என நினைக்கிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், பாட்டாளி மக்கள் கட்சி கவுரவ தலைவர் கோ.க.மணி, சட்டமன்ற உறுப்பினர் அருள், வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி, வன்னியர் சங்க மாநிலச் செயலாளர் கருணாநிதி, மாவட்டச் செயலாளர் ஜெயராஜ், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: மீன் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா கசிவா? - நிலா சீ புட்ஸ் தரப்பு விளக்கம் என்ன? - THOOTHUKUDI AMMONIA GAS LEAK