சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான ராபர்ட் பயாஸ், முருகன், ஜெயக்குமார் ஆகிய மூவரும் திருச்சி சிறப்பு முகாமில் தங்கி இருக்கின்றனர்.
இதையடுத்து, மூவரும் தங்கள் சொந்த நாடான இலங்கைக்குச் செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்து வந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு பாஸ்போர்ட் பெறுவதற்கான நேர்காணலுக்கு, மூவரையும் போலீசார் இன்று அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது இலங்கை துணை தூதராக அதிகாரி வெங்கடேசன் தலைமையில், மூவருக்கும் நேர்காணல்கள் நடத்தப்பட்டு வருகிறது. உதவி ஆணையர் சரவணன் தலைமையில், 10க்கும் மேற்பட்ட போலீசார் காவல்துறை வாகனத்தில் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு, இந்த நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து, நேர்காணல் முடிந்தவுடன் ஒரு வார காலத்திலிருந்து பத்து நாட்களுக்குள் அவர்கள் மூவருக்கும் பாஸ்போர்ட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முருகனை பார்ப்பதற்கு அவரது மனைவி நளினியும் இலங்கை துணைத் தூதரகத்திற்கு வந்துள்ளார். இதனால் அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னதாக, இலங்கைக்கு செல்ல வேண்டும் என வழக்கு தொடர்ந்த சாந்தன், உடல் நலக்குறைவால் சில நாட்களுக்கு முன்பு காலமானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கும் தேனி மலை கிராம மக்கள்.. காரணம் என்ன?