மதுரை: மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான கார்த்தி. இவர் தன்னுடைய சிறுவயதிலிருந்தே ரஜினியின் தீவிர ரசிகராக இருந்துள்ளார். எப்பொழுது ரஜினியின் படம் வந்தாலும் ஃபர்ஸ்ட் டே, ஃபர்ஸ்ட் ஷோவில் படத்தைப் பார்த்து விடுவாராம்.
இவர் மட்டும் அல்லாது இவரின் தந்தை, மகள் என அனைவருமே ரஜினியின் தீவிர ரசிகர்கள் ஆவர்.'ரஜினியை ஒரு நடிகராக மட்டும் பார்க்காமல் அவரை ஒரு கடவுளாகப் பார்ப்பதாகத் தெரிவிக்கும் கார்த்திக், தன் வீட்டிலேயே அவருக்காக கோயில் ஒன்றை உருவாக்கியுள்ளார் என்பது ஆச்சரியமான விஷயமாகும்.
ரஜினி கோயில்: கடந்த 2023ஆம் ஆண்டு முதல் 250 எடை கொண்ட கருங்கல்லினால் ஆன ரஜினி சிலை ஒன்று வைத்து அதற்கு பூஜை செய்து வருகின்றார். இந்தநிலையில் நவராத்திரியை முன்னிட்டு தான் உருவாக்கிய ரஜினி திருக்கோயிலில், அவர் நடித்த படங்களின் கதாபாத்திரங்களை மையப்படுத்தி 170-க்கும் மேற்பட்ட உருவங்களைக் கொண்ட கொலுவினை உருவாக்கி அசத்தியுள்ளார்.
அத்துடன் ரஜினி நடித்த கழுகு படத்தை கருத்திற் கொண்டு, ரஜினியின் திருவுருவச் சிலைக்கு முன்பு 50 கிலோ எடையுள்ள கருங்கல் கழுகுச் சிலையையும் பிரதிஷ்டை செய்துள்ளார். இதுகுறித்து கார்த்திக் கூறுகையில், "கடந்தாண்டு 3 அடி உயரமுள்ள ரஜினியை சிலையை இங்கே அமைத்தோம். இங்கு வழக்கமாக ஒவ்வொரு நாளும் காலை 6 மணி, மாலை 6 மணிக்கு பூஜை நடைபெறும். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஆறு வகையான அபிஷேகங்களோடு சிறப்புப் பூஜைகள் நடைபெறும்" என்றார்.
கதாபாத்திரங்களைக் கொண்டு கொலு: தொடர்ந்து பேசிய அவர், "ரஜினி கோயிலில் கொலு வைக்க முடிவு செய்து, அவர் நடித்த படங்களின் பாத்திரங்களை வைத்து 171 படங்களைத் தேர்வு செய்து அவற்றை ஃபோம் ஷீட்டில் உருவாக்கினோம். உழைப்புக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு ரஜினி.
அதனைக் காட்டும் வகையிலான கொலு பொம்மைகள் இங்கே இடம் பெற்றுள்ளன. எங்களைப் பொறுத்தவரை அவர் நீண்ட ஆயுளோடு, சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதுதான் ஆசை" என தெரிவித்தார். கோவில் தொடங்கி தற்போதைய கொலு வரை அனைத்தையும் தனது சொந்தப் பணத்திலேயே உருவாக்கியுள்ள கார்த்திக், இதற்காக மற்ற ரஜினி அபிமானிகள் தர விரும்பிய எந்த உதவியையும் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். அதேபோன்று ரஜினியை மனதார நேசித்து, ஆர்ப்பாட்டமின்றி இந்தக் கோவிலுக்கு வருகின்ற எவருக்கும் அனுமதி உண்டு. விளம்பரம் தேடுகின்ற எவருக்கும் இங்கே அனுமதியில்லை என்பதில் திட்டவட்டமாக இருக்கிறார்.
இதையும் படிங்க: குலசை தசரா: கேட்ட வரம் அருளும் முத்தாரம்மன்.. விரத முறைகளும் வேடங்களின் பலன்களும்!
எம்.இ.கம்ப்யூட்டர் சயின்ஸ் பயிலும் கார்த்திக் மகள் அனுஷா கூறுகையில், "நவராத்திரி கொலுவில் இடம் பெறக்கூடிய வகையில் வித்தியாசமாக சிறப்பாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று அப்பா முடிவெடுத்தபோது, நான் களிமண்ணால் படையப்பா ரஜினியை உருவாக்கினேன். சிவாஜி பட ரஜினியை வெள்ளை சிமெண்ட்டால் செய்தேன். 171 பாத்திரங்களையும் இதேபோன்று களிமண்ணால் வரும் ஆண்டு நவராத்திரி கொலுவில் அமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.
கார்த்திக்கின் மூத்த சகோதரர் சங்கர் கூறுகையில், "நாங்கள் அமைத்துள்ள இந்தக் கொலுவைப் பார்க்க வரும் நபர்களுக்கு சணல் பையும், இனிப்பும் வழங்கி வருகிறோம். ரஜினி மீது அபிமானம் கொண்ட எவரும் இதனைப் பார்வையிட வரலாம்" என்று மகிழ்ச்சியோடு வரவேற்கிறார். இந்தக் கொலு வருகின்ற அக்டோபர் 31 தீபாவளி வரை இருக்கும் எனவும் தகவல் தெரிவித்தார்.
ரஜினி எங்களை அழைப்பார்: கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி துவங்கி, அக்டோபர் 17-ஆம் தேதி வரை அரசு விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் நடிகர் ரஜினிக்கு தொடர்ந்து 150 நாட்கள் கடிதம் எழுதி சாதனை படைத்துள்ளார். இதற்கான அக்னாலேஜ்மெண்ட் மற்றும் அஞ்சல் பில்லைப் ரஜினி கோவிலிலேயே ஒட்டி வைத்து காட்சிப்படுத்தியுள்ளார். இவ்வாறு பல்வேறு விஷயங்களை ரஜினிக்காக செய்து வரும் கார்த்திக், "ஒரு நாள் எங்கள் உண்மையான அன்பை புரிந்து கொண்டு ரஜினி எங்களை அழைப்பார்" என்ற மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்