சென்னை: மறைந்த முதல்வர் கருணாநிதியை குறித்து திமுக அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ''கலைஞர் எனும் தாய்'' புத்தக வெளியீட்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
முதல்வர் ஸ்டாலின் அந்த புத்தகத்தை வெளியிட, நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து மேடையில் உரையாற்றிய ரஜினி, முதல்வரை பார்த்து, ''எப்படி மூத்த அமைச்சர்களை வைத்து சமாளிக்கிறீர்கள்? அதிலும், அமைச்சர் துரைமுருகன் கலைஞரின் கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர்'' என்றார்.
வயது மோதல் முதல் வருத்தம் வரை.. ரஜினி Vs துரைமுருகன் விவகார காட்சிகள்#rajinikanth #DuraiMurugan #mkstalin #kalaignarEnumThai #Chennai #Vellore #etvbharattamilnadu pic.twitter.com/jhmwURKzEW
— ETV Bharat Tamil nadu (@ETVBharatTN) August 26, 2024
ரஜினியின் இந்த பேச்சுக்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், ''ரஜினி என்னைவிட ஒரு வயது கூடதான், அறிவுரையும் சொன்னார். அவர் சொன்ன அத்தனையையும் நான் புரிந்துகொண்டேன். பயப்பட வேண்டாம். நான் எதிலும் தவறிவிடமாட்டேன்'' எனக்கூறினார்.
அதன் தொடர்ச்சியாக வேலூரில் செய்தியாளர்கள் சந்தித்த அமைச்சர் துரைமுருகனிடம், மூத்த அமைச்சர்களை பற்றி ரஜினி பேசியதை குறித்த கேள்வி எழுப்பினர். அதற்கு துரைமுருகன், மூத்த நடிகர்கள் எல்லாம் பல்லு போயி தாடி வளர்ந்து, சாகுற நிலையில் இருக்கும்போது நடிப்பதினால் தான், இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது'' என விமர்சித்தார்.
அமைச்சரின் இந்த பேச்சு ரஜினி ரசிகர்களையும் தாண்டி, அரசியல் அரங்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்று சென்னை விமான நிலையம் வருகை தந்த ரஜினியிடம், இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட்டபோது, ''அமைச்சர் துரைமுருகன் எனது நெருங்கிய நண்பர், அவர் என்ன சொன்னாலும் அவரை பிடிக்கும், எங்களது நட்பு தொடரும்'' என்று சிம்பிளாக கூறிவிட்டு சென்றார்.
அமைச்சரின் விமர்சனத்துக்கு இவ்வாறு பதிலளித்து ரஜினி முற்றுப்புள்ளி வைத்ததை போல, இன்று வேலூரில் உள்ள விஐடி பல்கலை கழக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற அமைச்சர் துரைமுருகனும், ''எங்கள் நகைச்சுவையை யாரும் பகையாக எடுத்துக் கொள்ளக்கூடாது, நாங்கள் எப்போதும் நல்ல நண்பர்களாக இருப்போம்" என்று பதிலளித்து இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதையும் படிங்க: கட்சியில் சேர்ந்து 6 மாசமாச்சு.. அண்ணே சரிதானே? - மேடையில் ஓப்பனாக பதவி குறித்து பேசிய விஜயதாரணி!