சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருகெடுத்து ஓடடுகிறது.
சென்னையில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்துள்ளதால் தரை தளத்தில் வசிப்போர் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். குறிப்பாக சென்னை குரோம்பேட்டை அஸ்தினாபுரம் திருமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பகுதியில் தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகளில் மழை நீர் புகுந்துள்ளது.
வீடுகளுக்குள் முழங்கால் அளவிற்கு வீட்டிற்குள் மழை நீர் புகுந்துள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.இது குறித்து பேசிய அந்த பகுதியில் வசிக்கும் ஒருவர், "அஸ்தினாபுரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கால்வாய்கள் முறையாக தூர்வரப்படாமல் இருந்ததால் மழை நீர் நிரம்பி கழிவுநீருடன் கலந்து வீட்டுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது," என்றார்.
இதையும் படிங்க: சென்னை கனமழை; ரயில் சேவையில் தடையில்லை - சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!
மேலும் மழைநீருடன் கழிவு நீர் கலந்து உள்ளதால் வீடு முழுவதும் துர்நாற்றம் வீசுவதாகவும் அஸ்தினாபுரம் திருமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.வீட்டுக்குள் புகுந்த தண்ணீரை பாத்திரங்களில் எடுத்து தெருவில் ஊற்றி வருகின்றனர். மழை இடைவிடாமல் பெய்யும் நிலையில் சிறிது கூட ஒய்வு எடுக்க முடியாமல் மழை நீரை வெளியேற்றி வருவதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். மழை நீரில் கழிவு நீரும் கலந்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதி வாசிகள் கூறியுள்ளனர்.
"வீட்டுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் ஈரத்திலேயே நிற்க வேண்டி இருக்கிறது. சமைப்பது உள்ளிட்ட எந்த வேலையும் செய்ய முடியவில்லை. புயல் இன்னும் கரையை கடக்காத நிலையில் மேலும் தொடர்ந்து மழை பெய்தால் தரைத்தளம் முழுமையாக மூழ்கி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது," என்றும் அந்த பகுதி மக்கள் கூறினர். எனவே, தாம்பரம் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் குரோம்பேட்டை பகுதியில் குடியிருப்புகளில் சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்