சென்னை: சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் சைதாப்பேட்டை ரயில்வே போலீசில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் தனது நண்பருடன் அமர்ந்து விடுதிக்குச் செல்வதற்காக ரயிலுக்கு காத்துக் கொண்டிருந்தேன். அப்போது, மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரில் தெரிவித்திருந்தார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டபோது, புகாருக்குள்ளான நபர் சைதாப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு தலைமைக் காவலர் என்று தெரிய வந்தது. அவர் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், நான்கு தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
பாலியல் புகாரை தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே, காவலர் கமலக்கண்ணன் நீதிமன்றத்திற்கு சென்று முன்ஜாமீன் பெற்று உள்ளார். இதனையடுத்து, போலீசார் தாம்பரத்தில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று வழக்கு சம்பந்தமான பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கான ஆணையை அளித்து உள்ளனர். மேலும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் காவல்துறை உயர் அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு காட்பாடியில் இருந்து சென்னை நோக்கி வந்த ஓடும் ரயிலில் ஐடி நிறுவன ஊழியருக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மீண்டும் புறநகர் ரயில் நிலையத்தில் காவலர் ஒருவர் பெண்ணுக்கு மதுபோதையில் பாலியல் தொந்தரவு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 30 பவுன் நகையில் ஆன்லைன் சூதாட்டம்.. மனைவி திடீர் தற்கொலை.. தேனி அருகே பரபரப்பு!