தென்காசி: தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் தென்காசி (தனி) நாடாளுமன்றத் தொகுதியில் திமுகவைச் சார்ந்த ராணி ஸ்ரீகுமார், அதிமுக கூட்டணியை சார்ந்த கிருஷ்ணசாமி, பாஜக கூட்டணியை சார்ந்த ஜான் பாண்டியன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக இசை மதிவாணன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் தென்காசி தொகுதியில் போட்டியிடும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தலைவர் பாண்டியராஜா மற்றும் செயலாளர் ஜெகன் ஆகியோர் விடுத்துள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது, "தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் பாவூர்சத்திரம், கீழப்புலியூர், தென்காசி, செங்கோட்டை, பகவதிபுரம், கடையநல்லூர், பாம்பு கோவில் சந்தை, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய ரயில் நிலையங்கள் அடங்கும்.
இந்த ரயில் நிலையங்களை மேம்படுத்துவது தொடர்பான அறிவிப்புகளை தங்கள் தேர்தல் வாக்குறுதிகளாக ஏற்று அதனை நிறைவேற்றி தரவேண்டும். குறிப்பாக தென்காசி சந்திப்பு ரயில் நிலையத்தில் நீர் ஏற்றும் வசதி ஏற்படுத்தி தென்காசி ரயில் நிலையத்தை முனையமாக மாற்றுதல்.
தென்காசி - செங்கோட்டை இடையே இரட்டை அகல ரயில் பாதை அமைத்தல், சங்கரன்கோவில் - ராஜபாளையம் இடையே கரிவலம் வந்த நல்லூர் ரயில் நிலையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருதல். திருச்செந்தூரிலிருந்து நெல்லை தென்காசி வழியாக கொல்லம் வரை உள்ள ரயில் வழித்தடத்தில் அமைந்துள்ள முக்கிய ரயில் நிலையங்களின் நடைமேடைகளை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டித்தல்.
நெல்லையிலிருந்து தென்காசி வழியாக சென்னை, பெங்களூர், மங்களூர், மும்பை ஆகிய நகரங்களுக்கு தினசரி ரயில்கள் இயக்குதல். எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாரம் இருமுறை ரயில், சிலம்பு எக்ஸ்பிரஸ் வாரம் மும்முறை ரயில் இயக்கப்பட வேண்டும்.
மேலும் செங்கோட்டை - தாம்பரம் வாரம் மும்முறை ரயில் ஆகியவற்றை தினசரி இயக்குதல், மீட்டர் கேஜ் காலத்தில் இயங்கியதைப் போல நெல்லை - கொல்லம் இடையே பகல் நேர நேரடி ரயில்கள் இயக்குதல் வேண்டும். ஆகிய கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதிகளாக ஏற்று நிறைவேற்றி தர அனைத்து கட்சி வேட்பாளர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: புலம்பெயர் வாக்காளர்களை குறிவைத்து கோவையில் ஹிந்தி போஸ்டர்.. பிரிவினையை தூண்டும் செயல் என த.பெ.தி.க புகார்!