மயிலாடுதுறை: விழுப்புரம், கடலூரில் கனமழை காரணமாக ரயில் பாதைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. எனவே இந்த பகுதிகளின் வழியே சென்னைக்கு வரவேண்டிய தென்மாவட்ட ரயில்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சில ரயில்கள் மாற்றுப்பாதையில் செல்கின்றன. சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஃபெஞ்சல் புயல் (Cyclone Fengal) எதிரொலியாகப் பெய்த பலத்த மழையால், விழுப்புரம் மார்க்கத்தில் செல்லும் சில ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், சில ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. திருச்சியில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் ரயில் மயிலாடுதுறையில் நிறுத்தப்படுவதாக மயிலாடுதுறை ரயில்வே நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள், ரயில் பயணிகள் குழப்பத்தில் உள்ளனர்.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதனைத் தொடர்ந்து பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக, விழுப்புரம் மார்க்கத்தில் செல்லும் சில ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பல்வேறு ரயில் சேவை மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
Due to suspension of Bridge No.452 between Vikravandi – Mundiyampakkam and water rising above danger level, the following change in origination and short termination of trains have been made in the pattern of train services#SouthernRailway #CycloneFengal #ChennaiRains pic.twitter.com/VPbwdMtIdZ
— Southern Railway (@GMSRailway) December 2, 2024
மாற்றுப்பாதையில் செல்லும் ரயில்கள்: மயிலாடுதுறையில் இருந்து நேற்று இரவு புறப்பட்டு சென்னை சென்ற உழவன், மண்ணை, கம்பன், அந்தியோதயா ரயில்கள் அனைத்தும் காட்பாடி வழியாக சென்னைக்குத் திருப்பி விடப்பட்டன. கன்னியாகுமரி, சென்னை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்களும் காட்பாடி வழியாக சென்னைக்கு சென்றன.ராமேஸ்வரத்திலிருந்து அயோத்தியா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரத்தில் இருந்து காட்பாடி வழியாக அயோத்தியா செல்கிறது.
ரத்து செய்யப்பட்ட ரயில்கள்: சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி வரும் சோழன் எக்ஸ்பிரஸ், திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் மற்றும் விழுப்புரம் இருந்து தாம்பரம் செல்லும் ரயில், பாண்டிச்சேரியில் இருந்து சென்னை செல்லும் ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன மேலும் வந்தே பாரத், தேஜாஸ், எக்மோரில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: புயலுக்கு நடுவே சிக்கிய விமானம்.. வைரலான வீடியோ - இண்டிகோ ஏர்லைன்ஸ் விளக்கம்!
மயிலாடுதுறையில் நிறுத்தப்பட்ட ரயில்: இந்த நிலையில், கோயம்புத்தூரில் இருந்து மயிலாடுதுறை வழியாக தாம்பரம் செல்லும் வண்டி எண் - 06185 என்ற ரயில் விழுப்புரம் வரை மட்டுமே செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, மயிலாடுதுறைக்கு இன்று காலை 7.30 மணிக்கு வர வேண்டிய இந்த ரயில் காலை 9 மணிக்கு வந்து சேரும் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது மயிலாடுதுறையோடு நிறுத்தப்படுவதாக மயிலாடுதுறை ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Due to suspension of Bridge No.452 between Vikravandi – Mundiyampakkam and Bridge No. 84 between Tirukoilur and Tandarai water rising above danger level, the following changes have been made in the pattern of train services#SouthernRailway pic.twitter.com/VCOFj7BDoA
— Southern Railway (@GMSRailway) December 2, 2024
அதனால், இந்த ரயிலில் சென்னைக்குப் பயணம் செய்ய வந்த பயணிகள் பலரும் திரும்பிச் சென்றனர். விழுப்புரம் செல்வதற்காக வந்த பலர் நீண்ட நேரம் ரயில் நிலையத்திலேயே காத்திருந்த நிலை ஏற்பட்டது. இவ்வாறு பல ரயில்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டதன் காரணமாகவும், பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டதன் காரணமாகவும் பயணிகள் பெரும் குழப்பத்திற்குள்ளாகி உள்ளனர்.