மதுரை: நாடாளுமன்றத்தில் நேற்று (ஜூலை 23) மத்திய நிதி அமைச்சர் 2024 - 25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கையில், ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்த விளக்கங்களை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், “தெற்கு ரயில்வேக்கு தமிழக திட்டங்களுக்காக ரூ.6,362 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே எல்லைக்குட்பட்ட கேரள மாநிலத்திற்கு ரயில்வே திட்டங்களுக்காக ரூ.3,011 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.33,467 கோடி மதிப்பீட்டில் 2,587 கிமீ தொலைவிற்கு புதிய ரயில் பாதை அமைப்பதற்கான 22 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Tamil Nadu has been allocated an outstanding outlay of ₹6,362 Cr. in the FY 2024-25 budget. #RecordBudget4Rail pic.twitter.com/CncrYhmXy4
— Ministry of Railways (@RailMinIndia) July 24, 2024
அதில், மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட ஈரோடு - பழனி புதிய ரயில் பாதை திட்டத்திற்கு ரூ.100 கோடியும், அருப்புக்கோட்டை வழியாக மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்திற்கு ரூ.100.10 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் - தனுஷ்கோடி புதிய ரயில் பாதை திட்டத்தை கைவிடக் கோரி தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது. தமிழகத்தில் புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு 2,759 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. ஆனால், மாநில அரசிடமிருந்து 807 ஹெக்டேர் நிலம் மட்டுமே பெறப்பட்டுள்ளது. தேவையான நிலம் இல்லாமல் பல்வேறு ரயில் பாதை திட்டங்கள் கைவிடப்படும் நிலையில் உள்ளன.
அமிர்த பாரத்: அம்பாசமுத்திரம், திண்டுக்கல், காரைக்குடி, கோவில்பட்டி, மதுரை, மணப்பாறை, பழனி, பரமக்குடி, புதுக்கோட்டை, ராஜபாளையம், ராமநாதபுரம், ராமேஸ்வரம், சோழவந்தான், ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி, திருச்செந்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களை நவீன வசதிகளுடன் அமிர்த பாரத் ரயில் நிலையங்களாக மேம்படுத்தவும் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரயில்களை பாதுகாப்பாக இயக்க ரயில் இன்ஜின் டிரைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
ரயில்வே சட்டம் மற்றும் பணிநேர ஒழுங்குமுறை விதிகளின்படி, லோகோ பைலட்டுகள் வாரத்திற்கு 54 மணி நேரம் பணியாற்ற வேண்டும்.
ஆனால், தற்போது அவர்கள் 52 மணி நேரம் பணியாற்றும் சூழல் உள்ளது. இந்த 52 மணி நேரத்தில் 48 மணி நேரம் நேரடி பணியும், 4 மணி நேரம் பணிக்கு தயாராகும் காலமாகவும் கணக்கிடப்ப்படுகிறது. அதே போல லோகோ பைலட்டுகள் பணி நிமித்தமாக வெளியூர் செல்லும் போது பணி நேரத்துடன் கூடுதலாக ஒரு மணி நேரம் சேர்த்து ஓய்வு வழங்கப்படுகிறது. மீண்டும் அவர்கள் தலைமையகத்துக்கு திரும்பும் போது 16 மணி நேரம் ஓய்வு வழங்கப்படுகிறது. அதேபோல ஒவ்வொரு 15 நாட்களுக்கும் கால முறை ஓய்வு வழங்குவதும் உறுதி செய்யப்படுகிறது.
நாடு முழுவதும் 558 ஓடும் தொழிலாளர் ஓய்வு அறைகள் குளிர்சாதன வசதிகளாக செய்யப்பட்டுள்ளன. 7000 ரயில் என்ஜின்களுக்கும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. லோகோ பைலட்டுகளுக்கான அடிப்படை வசதிகளோடு புதிய ரயில் என்ஜின்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன என ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: நபார்டு வங்கியில் இயற்கை உரம்; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு! - Organic Fertilizers