சென்னை: வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நான்கு முனை போட்டியாக நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் தலைவர்கள் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்கத் தேர்தலுக்காகத் தேசிய தலைவர்களின் வருகையும் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 6வது முறையாகத் தேர்தல் பரப்புரைக்காகத் தமிழ்நாடு வரவுள்ளார். மேலும் பாஜகவின் தேசிய தலைவர் ஜே பி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரும் தமிழ்நாட்டிற்குத் தேர்தல் தேர்தல் பரப்புரைக்காக வர உள்ளனர்.
தமிழ்நாடு வரும் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் ரோட் ஷோ நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மற்றும் குறிப்பிட்ட தொகுதிகளை இணைக்கும் இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்த பாஜக திட்டம் வகுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மோடியை தொடர்ந்து அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகின்ற ஏப்ரல் 11ஆம் தேதி கோவை மற்றும் திருநெல்வேலியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
ராகுல் காந்தியுடன் இணைந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், இந்தியா கூட்டணி தலைவர்களும் பொதுக்கூட்ட பிரச்சார நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். பிரதமர் மோடி தேர்தல் பரப்புரைக்காக 6வது முறையாகத் தமிழ்நாடு வருகிறார், அதே நேரத்தில் ராகுல் காந்தி தற்போது தான் முதல் முறை தேர்தல் பரப்புரைக்காகத் தமிழ்நாடு வரவுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியின் முதல் பரப்புரை கூட்டம் என்பதால் கூட்டணிக் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வடலூர் வள்ளலார் ஞானசபை விவகாரம்: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! - Vadalur Sathya Gnana Sabai