தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக போதை பொருட்கள், விவசாய விளை பொருட்கள், மருந்துகள், வலி நிவாரணி மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவது தொடர்ந்து நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக இலங்கையில், இந்திய பொருட்களின் விலை மூன்று மடங்கு அதிகம் என்பதால் கடத்தல் தொடர்கதையாகி உள்ளதாக மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த கடத்தலில் ஹேராயின், அம்பர் கிரீஸ், கஞ்சா ஆயில் போன்ற விலையுயர்ந்த போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாகவும் இப்பகுதியில் பேசப்படுகிறது. இதனை அடுத்து, இந்த தொடர் கடத்தல் குறித்து தகவல் அறிந்த கியூ பிரிவு போலீசார் (Q-Branch Police) மாவட்டம் முழுவதும் உள்ள கடற்கரை பகுதியில் கண்காணிப்பை பணிகளை தீவிரப்படுத்தினர்.
அண்மையில், கடத்தல் பொருட்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனங்கள், பைபர் படகுகளை கடற்கரையிலேயே விட்டு விட்டு கடத்தல் கும்பல் தப்பிச் சென்ற சம்பமும் நடந்துள்ளது. இன்னும், சில இடங்களில் பைபர் படகில் தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்திச் செல்லும் போது போலீசார் விரட்டிச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி அடுத்த தாளமுத்து நகர் மொட்டை கோபுரம் பகுதியில் பிடி இலைகள் கடத்தல் நடைபெற உள்ளதாக தூத்துக்குடி கியூ பிரிவு போலீசாருக்கு நேற்று முன்தினம் (பிப்.10) தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில், கியூ பிரிவு போலீசார் தாளமுத்து நகர் கடற்கரை பகுதியில் கண்காணிப்பை பணிகளை தீவிர படுத்தினர்.
மேலும், நேற்று (பிப்.11) அதிகாலை முதலே இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் எஸ்ஐ ஜீவமணி, தர்மராஜ் ஆகியோர் சிலுவைப்பட்டி மொட்டை கோபுரம் பகுதியில் தீவிர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மொட்டை கோபுரம் பகுதியில் டூவீலர் மற்றும் லோடு வாகனத்தில் பண்டல்களுடன் கும்பல் வந்துள்ளது.
அப்போது, கடற்கரையில் இருந்த இரண்டு பைபர் படகுகளில் சரக்குகளை ஏற்றிய போது போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது, அந்த கடத்தல் கும்பல் இருட்டில் ஓடி கும்பல் தப்பியதாக கூறப்படுகிறது. பின்னர், போலீசார் மேற்கொண்ட சோதனையில் 84 பண்டல்களில் மூன்று டன் பீடி இலைகள் இருந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் 2 பைபர் படகுகளில் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த, சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 3 டன் பீடி இலைகளை பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட இருந்த இரண்டு பைபர் படகுகள், சரக்கு வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து தப்பி ஓடிய கடத்தல் கும்பலை தேடும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஓசூரில் தொடரும் காப்பர் வயர் திருட்டு; ஒரே மாதத்தில் 4 டிரான்ஸ்பார்மர் உடைக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு!