தூத்துக்குடி: அண்மைக் காலமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள், பீடி இலை, களைக்கொல்லி மருந்து உள்ளிட்ட பொருட்கள் சட்ட விரோதமாக கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவ்வப்போது, கடத்தலில் ஈடுபடும் நபர்களை 'கியூ' பிரிவு போலீசார் (Q division police) மற்றும் கடலோர காவல் படையினர் மடக்கி பிடித்து வருகின்றனர்.
மேலும், சட்டவிரோதமாக கடத்தலில் ஈடுபடுவதை தடுப்பதற்காகக் கடற்கரை ஓரங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை கிராமத்தில் தூத்துக்குடி கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், செல்வகுமார், தலைமைக் காவலர் ராமர், இருதயராஜ், காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் சென்ற TN 21 R 8350 பதிவு எண் கொண்ட லோடு வேனை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். சோதனையில், அந்த லோடு வேனில் பீடி இலைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. அதன் பின்னர், வேன் ஓட்டுநர் தூத்துக்குடி S.S.மாணிக்கப்புரம் பகுதியைச் சேர்ந்த வேல் என்பவரின் மகன் பாலமுருகன்(35) மற்றும் ஆலந்தலை பகுதியைச் சேர்ந்த தொம்மை என்பவரின் மகன் ராஜா(29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயுக்கசிவு.. குமரியில் தீயணைப்பு வீரர்கள் மூவர் மருத்துவமனையில் அனுமதி!
தொடர்ந்து மேற்கொண்ட சோதனையில், 42 மூடைகளில் சுமார் ஆயிரத்து 250 கிலோ பீடி இலைகளை, ஆலந்தலை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. மேலும், இவர்கள் கடத்த முயன்ற பீடி இலைகளின் மதிப்பு ரூ.10 லட்சம் என்று கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த திங்கட்கிழமை அதிகாலை திருச்செந்தூர் அடுத்த காயல்பட்டினம் பகுதியில் கியூ பிரிவு போலீசார் மேற்கொண்ட சோதனையில், பைபர் படகில் இலங்கைக்கு கடத்த முயன்ற 20 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரத்து 500 கிலோ பீடி இலைகளை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
இந்நிலையில், திருச்செந்தூர் அருகே ஒரே வாரத்தில் வெவ்வேறு பகுதிகளில் இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்..ஒருவர் கைது