தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள புன்னைக்காயல் கிராமத்தில் 15,000க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பஞ்சாயத்தில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இந்நிலையில், இதே ஊரைச் சேர்ந்த சோபியா என்ற பெண் பஞ்சாயத்து தலைவராக பணியாற்றி வருகின்றார்.
கடந்த 5 வருடங்களாக இந்த புன்னைக்காயல் கிராமத்திற்கு தேவையான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளதாக கூறும் இவரை தற்போது புன்னைக்காயல் கிராமத்திலுள்ள ஊர் தலைவர்கள் என்னை முறையாக பணி செய்யவிடாமல் தடுத்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சோபியா கூறுகையில்,"கடந்த வருடம் பெய்த மழை வெள்ளத்தின்போது திமுக சார்பில் யாரும் தங்களை காணவரவில்லை என்று கூறி என்னை ஊர் தலைவர்கள், ஊர்க்காரர்கள் தாக்கினர். இதுகுறித்து பலமுறை ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும், புன்னைக்காயல் கிராமத்திற்கு சொந்தமான இளைஞர் உடற்பயிற்சி கழகம் இருக்கும் இடத்தை ஊர் தலைவர்கள் சேர்ந்து விற்பனை செய்ய முயற்சித்தனர், அதை தடுத்த என்னையும் என் குடும்பத்தினரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விட்டனர். மேலும் ஊரின் நன்மை, தீமைகள் எதுவும் எனது குடும்பத்திற்கு கிடையாது என்றும், எனது காருக்கு டிரைவராக யாரும் செல்லக் கூடாது என்றும் தண்டோரா மூலம் ஊரில் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வீடியோ காட்சியுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சோபியா புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், ஊர் தலைவர்கள் உள்பட 10 பேர் மீது ஆத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புன்னைக்காயல் ஊர்த்தலைவர் குழந்தை மச்சாதுவிடம் கேட்டதற்கு, "சோபியா ஊரின் இடத்தை ஊர் மக்களுக்கு தெரியாமல் விற்பனை செய்ய முயன்று வருகிறார். மேலும், ஊரில் உள்ள பள்ளி மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. அதனை சீரமைக்க வேண்டும் என பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இல்லை என்றால் அடுத்த வருடம் நமக்கு பள்ளி நடத்துவதற்கு அனுமதி கிடைக்காமல் போய்விடும். எனவே இந்த கட்டடத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் அல்லது புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதன் அடிப்படையில் ஊரில் உள்ள புறம்போக்கு இடத்தை விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணம் மூலம் இந்த பள்ளி கட்டடத்தை சீரமைக்க முடிவு செய்தோம். ஆனால், பஞ்சாயத்து தலைவர் சோபியா மறுப்பு தெரிவித்தார். மேலும் பஞ்சாயத்தில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் முறையாக செய்து தருவதில்லை. ஊரில் தண்ணீர் வரவில்லை என்று பொதுமக்கள் கேட்டால் கூட எந்தவிதமான பணிகளும் செய்து தரவில்லை" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லையா? - இந்த வாய்ப்பை தவறவிட வேண்டாம்! - Instructions of birth certificate