மதுரை: விவசாயிகள் போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட குர்கரன் சிங் அஸ்தியைக் கரைப்பதற்காகத் தமிழகம் வந்துள்ள பஞ்சாப் ஹரியானா மாநில விவசாயிகள் போராட்டக் குழுவினர் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்குச் சிறப்பு நேர்காணல் வழங்கினர்.
அப்போது, விவசாயிகள் போராட்டக் குழுவின் தேசியத் தலைவர் சர்வந்த்சிங் பந்தேர் கூறுகையில், "தலைநகர் டெல்லி சென்று நாங்கள் போராட முற்பட்டபோது அங்கே வரவிடாமல் மத்திய அரசு எங்களைத் தடுத்து நிறுத்தியது. இதில் விவசாயிகள் பலர் தாக்குதலுக்கு உள்ளாகினர்.
இந்தப் போராட்டத்தோடு தொடர்புடைய ஹரியானா மாநில இளைஞர்களைப் பொய்யான வழக்குகளின் கீழ் மத்திய மாநில அரசுகள் கைது செய்து வருகின்றன. அதனை எதிர்த்துக் கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி, ஹரியானா மாநில முதல்வர் மற்றும் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்கும் போராட்டம் நடத்தினோம்.
இந்தப் போராட்டத்தைக் கோவையில் நடத்த முயன்ற போது, தமிழ் மாநில பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை, கோவை மாநகர காவல் துறை ஆணையருக்கு இந்தப் போராட்டத்தைத் தடை செய்யக் கூடியதால் எங்கள் அனைவரையும் வீட்டுச் சிறையில் காவல்துறை வைத்தது.
மேலும், அதற்கு மாறாக பாஜக ஆளுகின்ற உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் அனுமதி கிடைத்து போராட்டத்தை நடத்தினோம். ஆனால், தமிழகத்தில் கோவையில் இந்தப் போராட்டத்தை நடத்த அனுமதிக்கவில்லை.
இந்தியா மற்றும் தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக நாங்கள் போராடுகிறோம். அது எங்கள் உரிமை. இந்த உரிமையை, எந்த அரசாக இருந்தாலும் சரி பறிக்க அனுமதிக்கக் கூடாது. இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட தியாகிகள், விவசாயிகளுக்காகப் போராடிய போராளிகள் உள்ள ஊர்களான கோயம்புத்தூர், திருப்பூர், பல்லடம், ராமநாதபுரம், ராமேஸ்வரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்குச் சென்று அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறோம்.
விவசாயிகள் போராட்டத்தின் தாக்குதலில் உயிரிழந்த குர்க்கரண் சிங் அஸ்தியை ராமேஸ்வரம் கடலில் கரைத்துள்ளோம். ஹரியானா மற்றும் ராஜஸ்தான் எல்லையில் கடந்த 58 நாட்களாக எங்களது போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதற்காகவே எங்களது நிலைமையை எடுத்துச் சொல்வதற்காக இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு வருகிறோம்.
தமிழ்நாட்டில் உள்ள சிறு விவசாயிகள் வங்கிகளில் கடன் பெறுகிறார்கள். ஆனால், இந்த கடனை கட்ட இயலாத விவசாயிகளிடம் இருந்து நிலங்களைப் பறிமுதல் செய்கிறார்கள். இதனை மாநில அரசு விசாரணை செய்து உரிய நீதியை வழங்க வேண்டும். அதேபோன்று தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் விவசாயிகளை அனுமதிக்க வேண்டும்" என்று கோரிகை விடுத்தார்.
இந்த நேர்காணலின்போது, தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் ராகவேந்தர் சிங் கோல்டன், பஞ்சாப் மாநில விவசாயி ஹர்விந்தர் சிங் மசானியா, மஞ்சித்சிங் ராய், உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த புரம்னேத்சிங் மாக்கட் மற்றும் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர்கள் மலைச்சாமி மற்றும் குருசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: ''ஆம், நான் எல்லோருக்கும் மேலானவன் தான்'' - பாடல்கள் காப்புரிமை வழக்கில் இளையராஜா தரப்பு வழக்கறிஞர் வாதம்!