புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், தெற்கு செட்டியாபட்டியை சேர்ந்த மாரிக்கண்ணு (48).இவர் நேற்று (வியாழகிழமை) சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றபோது கீரனூர் அருகே இருசக்கர வாகன மோதிய விபத்தில் மூளைச்சாவடைந்தார். இந்நிலையில் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய, அவரது இரு மகள்கள் சம்மதம் தெரிவித்த நிலையில், இன்று புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் அவரது உடலில் இருந்த இரண்டு சிறுநீரகங்கள், இரண்டு நுரையீரல்கள், ஒரு கல்லீரல், இரண்டு கண்கள், ஆகிய உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் தானமாக வழங்கப்பட்ட உறுப்புகள் சென்னை, மதுரை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த உடல் உறுப்புகள் 6 பேரின் உயிரை காக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மருத்துவர் ராஜ்மோகன் தலைமையிலான மருத்துவர்கள், செவிலியர்கள் இறந்த பெண்ணின் உடலுக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
பின்னர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்து வாகனத்தில் புறப்பட்ட மாரிக்கண்ணுவின் உடலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மருத்துவர்கள் வாகனம் முன்பு மௌன ஊர்வலமாக சென்று மாரிக்கண்ணு உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து செட்டியாப்பட்டியில் வைக்கப்பட்டிருந்த, மாரிக்கண்ணுவின் உடலுக்கு புதுக்கோட்டை கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, அரசு சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து உயிரிழந்த மாரிக்கண்ணுவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: