புதுக்கோட்டை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகிய இருவருக்கும் கடுமையான வார்த்தைப்போர் நிலவி வருகிறது. செல்வப்பெருந்தகையை முன்னாள் ரவுடி என்று கூறினார் அண்ணாமலை.
செல்வப்பெருந்தகை Vs அண்ணாமலை: இதற்கு கண்டனம் தெரிவித்த செல்வப்பெருந்தகை, "நான் ரவுடி என்பதற்கு அண்ணாமலை, ஆதாரத்தைக் காட்ட வேண்டும். இல்லை என்றால் அவர் மீது வழக்கு தொடரப்படும்" என தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை, செல்வப்பெருந்தகை கடந்து வந்த பாதை எனக்கூறி அவர் மீதான வழக்குகளை தனது எக்ஸ் தளத்தில் பட்டியலிட்டிருந்தார். மேலும், "செல்வப்பெருந்தகை குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்தில் இருந்து நான் பின்வாங்கப் போவதில்லை.
செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கமும் எனக்கில்லை. அவர்கள் எங்கு வேண்டுமானாலும் வழக்கு தொடரட்டும். அவற்றை நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்" எனவும் பதிவிட்டு இருந்தார். இதனைத் தொடர்ந்து அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு வீடியோ மூலம் பதில் அளித்துள்ளார் செல்வப்பெருந்தகை.
அதில், "அதில் 2003 பாஜக ஆட்சியின் போது உண்மைக்குப் புறம்பான வழக்குகளில் என்னை சிறையில் அடைத்தார்கள், இந்த வழக்கில் தமிழ்நாடு காவல்துறையே திரும்பப் பெறுகிறோம் அல்லது ரத்து செய்துவிடுங்கள் என்று கூறியது. நான் மன்னிப்பு கேட்கவில்லை, ரத்து செய்யவும் அனுமதி கேட்கவில்லை. இதுதான் என்னுடைய பின்னணி.
மேலும், நீதிமன்ற ஆணையைப் படியுங்கள். எதையும் தெரிந்து கொள்ளாமல் அண்ணாமலை அரைகுறையாகப் பேசுவது எந்த விதத்தில் நியாயம்? என அந்த வீடியோவில் கேட்டுள்ளார் செல்வப்பெருந்தகை.
காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்: இதற்கிடையில், அண்ணாமலையின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பாக, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராம.சுப்புராம் தலைமையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து, அண்ணாமலையின் உருவப்படத்தைத் தீயிட்டு கொளுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: 'ஒரு ரவுடிக்கு ஒரு போலீஸ்'.. நெல்லையில் தீவிரமாகும் கெடுபுடி.. அரிவாளுடன் சிக்கிய ரவுடி!