புதுக்கோட்டை: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் கோயிலுக்கு இன்று வருகை புரிந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு புவனேஸ்வரி அம்மன் சன்னதியில் சிறப்பு தீப ஆராதனை காட்டப்பட்டது. அங்கு சிறப்பு தரிசனம் செய்து முடித்தபின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
பாஜக, தேர்தல் ஆணையம் தில்லுமுல்லு: அப்போது பேசிய அவர், “பாஜக கூட்டணி ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து தில்லுமுல்லு செய்து தான் வெற்றி பெற்றுள்ளது. வாக்குப்பதிவின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. காலை 7:00 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்கு பதிவு முடிவு நடைபெற்றது ஆனால் அந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எப்படி முடியும் வரை 95 சதவீதம் பேட்டரி சார்ஜ் இருக்கும்.
மின்னணு வாக்குப்பதிவு முறையை கைவிடுக: இதனால்தான் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு முறையை கைவிட்டு வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறோம். ஆனால் அதற்கு பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூறியது போன்று உச்ச நீதிமன்றமும் இந்த விஷயத்தில் மின்னணு வாக்கு பதிவு முறை என்பது சரி என்று கூறியுள்ளது.
இதையும் படிங்க: 'ரவுடிகளுக்கு அவர்களின் மொழியில் பாடம்'.. தனது பேச்சுக்கு காவல் ஆணையர் அருண் விளக்கம்!
வளர்ந்த நாடுகளை வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்தும் போது இந்தியாவில் ஏன் பயன்படுத்தக் கூடாது. தேர்தல் ஆணையம் பாஜகவின் கைக்கூலியாக செயல்படுகிறது.
காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் சார்ஜ் அதிக அளவில் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
சிறப்பான தீர்ப்பு: ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நேற்று உயர் நீதிமன்றம் வழங்கி உள்ளது. அமைச்சரவை எடுத்த முடிவிற்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும் என்று கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. புதுச்சேரி மாநிலத்தில் கிரண்பேடியை எதிர்த்து அன்றைய காலகட்டத்தில் நான் போராட்டம் நடத்தினேன். மாநிலத்தின் நிர்வாகத்தை நடத்துவதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கும் உரிமை உள்ளது. ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது என்று நான் அப்போதே கூறினேன்.
பாஜக அலுவலகமாக மாற்றப்பட்ட ராஜ்பவன்: தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்தபோது ஆளுநர் ராஜ் பவனை பாஜகவின் அலுவலகமாக மாற்றி உள்ளார். துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் இருந்தபோது ராஜ் பவனின் தேவையில்லாத செலவுகள் செய்யப்பட்டுள்ளது. இரண்டு வருடத்தில் மூன்று கோடி ரூபாய் செலவு என்பது ஏற்றுக் கொள்ள முடியாது என்று பொதுமக்கள் அங்கு பேசி வருகின்றனர்.
இந்த செலவிற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பொறுப்பு ஏற்க வேண்டும். தமிழகத்தில் திமுக கூட்டணியில் திமுக தான் முதன்மையான கட்சி. காங்கிரஸ் கட்சி அதில் கூட்டணி ஆக உள்ளது. நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வருகிறோம். புதுச்சேரியில் நாங்கள் வெற்றி பெற்றால் திமுக எங்களுக்கு வெளியிலிருந்து ஆதரவு தரும்” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்