நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியானது, முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரள வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் வன விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் உலா வருவது வழக்கமாக உள்ளது. மேலும், நீலகிரி மாவட்டத்தில் பனிப்பொழிவு காரணமாக வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் என அனைத்தும் தற்போது கருகி காய்ந்து காணப்படுகிறது. மேலும், கோடை காலம் என்பதால் ஆறுகளும், நீர்வீழ்ச்சிகளும் வறண்டு காணப்படுகிறது.
அதன் காரணமாகத்தான், வன விலங்குகள் குடிநீர் மற்றும் உணவுக்காக குடியிருப்புப் பகுதியை நோக்கி படையெடுத்து வருகின்றன. இந்த நிலையில், கூடலூர் அருகே உள்ள நிலக்கோட்டை பகுதியில், அடிக்கடி ஒற்றைக் காட்டு யானை ஒன்று பஜார் மற்றும் குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஆகையால், உயிர் சேதம் ஏற்படும் முன்னர் காட்டு யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நிலக்கோட்டை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றைக் காட்டு யானை, வாகனங்கள் மற்றும் பொதுமக்களை விரட்டிச் செல்வதால், மனித - வனவிலங்கு மோதல் ஏற்படும் முன் வனத்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொண்டால், உயிர் சேதத்தைத் தவிர்க்க முடியும் என சமூக ஆர்வலர்களும் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது ஊருக்குள் சுற்றித் திரியும் ஒற்றைக் காட்டு யானையை வனத்துறையினர் வனப்பகுதியில் விரட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாகவும், இரவு நேரங்களில் பொதுமக்கள் தனியே வெளியே செல்ல வேண்டாம் என்றும், யானையைக் கண்டதும் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமெனவும், வனத்துறையினர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
மேலும், ஒற்றைக் காட்டு யானையைக் கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் யானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வனத்துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.