பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடியில் பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் திடீரெனச் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அரசடிக்காடு என்னும் காட்டுப்பகுதியில் குடியிருப்பவர்கள் பயன்படுத்தி வந்த சாலையை, தனிநபர் மலர் என்பவர் சாலை போட விடாமல் மறிப்பதாகவும், தட்டிக் கேட்பவர்களைத் தரக்குறைவாகப் பேசி தாக்குதலில் ஈடுபடுவதாகவும் கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புகார் தெரிவித்தனர்.
இதற்கு பூலாம்பாடி திமுக நகரச்செயலாளரும், பேரூராட்சி துணைத்தலைவருமான செல்வலட்சுமி சேகர் என்பவர் தூண்டுதலாக இருக்கிறார் என்று மறியல் செய்த பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தனிநபர் மலர் என்பவர் சாலை போட விடாமல் மறிப்பதால் அரசடிக்காடு காட்டுக் கொட்டகையில் குடியிருக்கும் பொதுமக்கள் ஊருக்குள் வந்து செல்ல முடியவில்லை என்றும், விவசாயப் பொருட்களை வாகனங்களில் எடுத்துச் செல்ல முடியவில்லை என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு தங்களுக்குச் சாலை வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாகச் சாலை மறியல் நடைபெற்றது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் இரண்டு அரசுப் பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்திய பின் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் புவனேஸ்வரி என்ற பெண்மணி கூறுகையில்,"நாங்கள் கடந்த 50 வருடமாகப் பயன்படுத்தி வந்த வழித்தடத்தைத் தனிநபர் மலர் என்பவர் சாலை போட விடாமல் தடுக்கிறார். மேலும் இதைக் கேட்கச் சென்ற இரு நபர்களையும் தாக்கி உள்ளார். எங்களுக்கு வெளியே வர வழி இல்லை நாங்கள் வரப்பு வாய்க்காலில் தான் புகுந்து வருகிறோம். ஆதலால் எங்களுக்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு உடந்தையாக ஆளும் கட்சி 7வது வார்டு கவுன்சிலர் செயல்படுகிறார்" எனவும் கூறினார்.
இதையும் படிங்க: 'சம வேலைக்கு சம ஊதியம்' கேட்டு 15வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்.. அரசு அழைத்து பேச கோரிக்கை!