திருநெல்வேலி: வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி கடந்த ஒரு வாரமாக நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று பகல் மழை சற்று ஓய்ந்து காணப்பட்ட நிலையில் நள்ளிரவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கன மழை பெய்யத் தொடங்கியது.
குறிப்பாக பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, தச்சநல்லூர் டவுன் உட்பட மாநகரின் அனைத்து பகுதிகளிலும் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. அதேபோல் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், கங்கைகொண்டான், வள்ளியூர் உள்பட மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் விடிய விடிய பலத்த மழை பெய்தது தொடர்ந்து.
தற்போது வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது வண்ணாரப்பேட்டை மேம்பாலம் அருகில் பேருந்து நிறுத்தத்தில் தேங்கிய மழை நீரால் பயணிகள் கடுமையாக சிரமப்பட்டனர்.
இதையும் படிங்க: "தென்தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தாமிரபரணி ஆற்றில் இறங்க வேண்டாம்: அதேபோல் மழைநீர் வடிந்து வருவதன் காரணமாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் வழக்கத்தை விட தண்ணீர் அதிகளவு செல்கிறது. தாமிரபரணி ஆற்றினை பொறுத்தவரை தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் இல்லை. இருப்பினும் பரவலாக பெய்து வரும் மழையால் சிறு ஓடைகள், கால்வாய்கள் மூலமாக ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து சுமார் 2100 கன அடி தண்ணீர் ஆற்றில் வந்து கொண்டு இருக்கிறது.
பெய்யக்கூடிய மழையின் அளவை பொறுத்து ஆற்றில் வரும் நீர் வரத்து கூடவோ, குறையவோ செய்யலாம். நீரின் வேகமும் அதிகமாக இருக்கலாம் எனவே பொதுமக்கள் யாரும் தாமிரபரணி ஆறு உள்ளிட்ட ஆறுகள், ஏரிகள், குளங்கள், ஒடைகளில் இறங்க வேண்டாம். கால்நடைகளையும் ஆற்றில் இறக்கிட வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்துள்ளார்.
மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை: இதற்கிடையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து கனமழை நீடித்து வரும் நிலையில் அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணம் கருதி இன்று ஏழாவது நாளாக மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இது போன்று நெல்லை மாவட்டம் களக்காடு தலையணை பகுதியிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அங்கும் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்