சென்னை: வட்டியில்லா நகைகடன் வழங்குவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்தின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் கூறி பாதிக்கப்பட்ட நபர்கள் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மேற்கு மாம்பலத்தில் ரூபி ராயல் ஜுவல்லர்ஸ் அண்ட் பேங்கர்ஸ் என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தை சையத் ஹிப்சார் மற்றும் அவரது மகன்களான ரகுமான், அனிஷ் ஆகியோர் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வந்தனர். இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக, இஸ்லாமிய சட்டப்படி நகைகளுக்கு வட்டியில்லா கடன் தருவதாக அறிவித்ததாகக் கூறப்படுகிறது.
அந்தக் கடனானது முஸ்லிம்களுக்கு மட்டும்தான் அளிக்கப்படும் என்று கூறியிருந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில், அந்த அறிவிப்பை நம்பி தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் முஸ்லிம்கள் தங்கள் நகைகளை இந்த நிறுவனத்தில் அடகு வைத்துள்ளனர். அதைத் தொடர்ந்து, கடையின் உரிமையாளர் ரகுமான் ஹிப்சார், சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது நிறுவனம் திவாலானதாக 2019ஆம் ஆண்டு தொடக்கத்தில் மஞ்சள் அறிக்கை அளித்தார்.
இதனை அடுத்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி ரூபி ராயல் ஜுவல்லர்ஸ் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள் அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் கடந்த 2019ஆம் ஆண்டு புகார் அளித்துள்ளனர். ஆனால், வழக்குப் பதிவு செய்து 4 ஆண்டுகள் ஆகியும், இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: “ஹேமந்த் சோரனின் மனைவியை ஜார்கண்ட் முதலமைச்சராக்க உள்ளார்” நிஷிகாந்த் துபே
இந்நிலையில், இன்று (ஜன.30) சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்ட 100-க்கும் மேற்பட்ட முஸ்லீம் பெண்கள், வட்டியில்லா நகைகடன் எனக்கூறி மோசடியில் ஈடுபட்ட ரூபி ஜூவல்லரி உரிமையாளர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்துப் பேசிய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டதை எடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: கேரள ஆர்எஸ்எஸ் தலைவரை கொலை வழக்கில் 15 பிஎப்ஐ நபர்களுக்கு மரண தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் அதிரடி!