புதுக்கோட்டை: விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு இன்று (ஏப்.25) விசாரணைக்கு வந்த நிலையில், இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வருமானத்தை விட 35 கோடியே 79 லட்சம் ரூபாய் கூடுதலாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் குற்றபத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு கடந்த ஆண்டு மே மாதம் முதல் நடைபெற்று வரும் நிலையில், 14வது முறையாக இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இன்றைய வழக்கு விசாரணைக்காக விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் ஆஜராகி இருந்தனர். ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உள்ள 15 ஆயிரம் பக்கங்கள் கொண்ட சொத்து ஆவணங்கள் அனைத்தும் தங்களுக்கு வேண்டுமென, ஏற்கனவே அமலாக்கத்துறை இந்த நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.
அதேபோல், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தரப்பில் வழக்கறிஞர் ஹேமந்தும், அமலாக்கத்துறையினர் தரப்பு வழக்கறிஞரும் பங்கேற்று தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் ஹேமந்த், அமலாக்கத்துறை கேட்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்த அனைத்து ஆவணங்களையும் வழங்க முடியாது எனவும், சட்டப்படி அதற்கான எந்த நடைமுறையும் இல்லை என்றும் கூறினார்.
தேவையென்றால் முக்கியமான ஆவண நகல்களை குறிப்பு எடுத்துக் கொடுத்தால் நாங்கள் ஆவணங்களை வழங்கத் தயாராக உள்ளோம் என கூறிய வழக்கறிஞர் ஹேமந்த், பூரண ஜெய் ஆனந்திடம் தங்கள் தரப்பு வாழ்த்தை முன் வைத்தார். ஆனால், தங்களுக்கு அனைத்து ஆவணங்களும் வேண்டும் என்றும், அதற்கு சட்டத்தில் இடம் உள்ளது என்றும், அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
இருவரின் வாதங்களையும் ஏற்ற நீதிபதி, இதுகுறித்து ஜூன் 12ஆம் தேதி விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி விசாரணையை முடித்து வைத்தார்.