மதுரை: உலகப்புகழ் பெற்ற கள்ளழகர் திருக்கோயிலின் சித்திரைத் திருவிழா, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது. இந்த நிலையில், ஏப்ரல் 21ஆம் தேதி மாலை 4 மணியளவில், திருமாலிருஞ்சோலையில் (ஸ்ரீ கள்ளழகர் கோயில்) இருந்து தங்கப்பல்லக்கில், கள்ளர் திருக்கோலத்தில் கள்ளழகர் மதுரை புறப்பாடானார்.
பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதில், சுந்தரராஜன்பட்டி, கடச்சனேந்தல் வழியாக, மூன்று மாவடிக்கு ஏப்ரல் 22ஆம் தேதி காலை 6.30 மணியளவில் வந்து சேர்ந்தார். அன்று இரவு 8 மணியளவில் தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு வருகை தந்த கள்ளழகர், தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளியபோது, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சூடிக்கொடுத்த நாச்சியார் ஆண்டாளின் திருமாலையைச் சாற்றி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதனைத் தொடர்ந்து, நேற்று (ஏப்.23) அதிகாலை 2.30 மணியளவில், தல்லாகுளம் கருப்பணசாமி திருக்கோயிலின் எதிரே ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அங்கிருந்து புறப்பாடான கள்ளழகர், தமுக்கம், கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் மூங்கில் கடைத் தெரு வழியாகச் சென்று, வைகை ஆற்றில் காலை 6.10 மணிக்கு எழுந்தருளினார். அங்கு அருள்மிகு வீரராகவாப் பெருமாளுக்கு கள்ளழகர் மாலை சாத்தும் வைபவம் நடைபெற்றது.
இதனை அடுத்து, நேற்று (ஏப்.23) காலை வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர், நேற்று (ஏப்.23) இரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் தங்கினார். அங்கிருந்து இன்று (ஏப்.24) சேஷ வாகனத்தில் எழுந்தருளி, வைகை ஆற்றுக்குள் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்றார்.
இதன் தொடர்ச்சியாக, திருமாலிருஞ்சோலையில் இருந்து மதுரை நோக்கிப் புறப்பட்டு வந்த கள்ளழகரின் பயண நோக்கங்களில் ஒன்றான, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு, தேனூர் மண்டபத்தில் இன்று (ஏப்.24) நடைபெற்றது.
இங்கு சேஷ வாகனத்தில் இருந்து கருட வாகனத்தில் எழுந்தருளி, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். தேனூர் மண்டபத்தின் அருகே குளம் போன்ற அமைப்பு ஏற்படுத்தி, அதில் பூக்கள் தூவி மண்டூக முனிவரின் உருவச்சிலை வைத்து, நாரையைப் பறக்க விட்டு சாப விமோசன நிகழ்ச்சி நடைபெற்றது.
மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்த பின்னர் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், தேனூர் மண்டபத்தை வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சாப விமோசன நிகழ்வைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக, பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில், கள்ளழகர் மீண்டும் ராமராயர் மண்டபம் நோக்கி புறப்பட்டார்.
இதையும் படிங்க: களைகட்டிய கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா.. திருநங்கைகளின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?