சேலம்: பாஜகவின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கடந்த 2013ஆம் ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவருக்கு 11ஆம் ஆண்டு நினைவஞ்சலிக் கூட்டம் சேலத்தில் இன்று நடைபெற்றது. இதில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன், துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆடிட்டர் ரமேஷ் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து பேராசிரியர் ராம.சீனிவாசன் கூறியதாவது, “தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு கடந்த 1990ஆம் ஆண்டு முதல் இந்துத்துவா தலைவர்கள் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என இதுவரை பல்வேறு தாக்குதல்களில் 140-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சேலத்தில் படுகொலை செய்யப்பட்ட ஆடிட்டர் ரமேஷின் சமூகப் பணிகளை பாராட்டிடும் வகையில் தமிழக அரசு சேலத்தில் முக்கியமான சாலை, மேம்பாலம் அல்லது பூங்காவிற்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும், கட்சி மாச்சரியங்களைக் கடந்து தமிழக அரசு இதனை செய்ய வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் தொட்டதற்கெல்லாம் மத்திய அரசையும், பிரதமரையும் குறை கூறி வருகிறார்.
மின் கட்டண உயர்வுக்கும், மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதிமுக ஆட்சியில் 5 லட்சம் கோடியாக இருந்த தமிழக அரசின் கடன், 3 வருட திமுக ஆட்சியில் எட்டரை லட்சம் கோடியாக உயர்ந்து விட்டது. இந்த கடன் சுமை ஏற ஏற மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு திமுக அரசை கொண்டு வந்து விட்டு விட்டது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் திமுக அரசு உள்ளது. தமிழகத்தில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாத திமுக அரசு, வாக்காளர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கி வருகிறது. இந்தியாவில் அதிக குடிகாரர்கள் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது. தமிழ்நாட்டை விட மூன்று மடங்கு பெரிய உத்தரபிரதேசத்தில் கூட இவ்வளவு குடிகாரர்கள் இல்லை. குடிகாரர்கள் நிறைந்த மாநிலம், கடனாளி மாநிலம் என்பதைத்தான் திமுக அரசு உருவாக்கியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் ராஜா வீட்டு கன்னுக்குட்டி என்பதால் அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. திமுக குடும்பச் சொத்து. அடுத்தடுத்த வாரிசுகளுக்கு அங்கு நிச்சயம் பதவி கிடைக்கும். தமிழக அரசு மத்திய அரசுடன் மோதல் போக்குடன் ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தில் கேந்திரா வித்யாலயா பள்ளி அமைக்க மாநில அரசு அனுமதி மறுத்து வருகிறது. கேந்திரிய வித்யாலயா தொடங்க மத்திய அரசுக்கு முழு உரிமை உள்ளது. மாநில அரசு அதை தடுக்க முடியாது. தொடர்ந்து இதேபோல மோதல் போக்கில் ஈடுபட்டால் மத்திய அரசு எதை செய்ய வேண்டுமோ அதை செய்யும்" இவ்வாறு அவர் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஐஆர்சிடிசியின் புனித தலங்களின் யாத்திரை எப்பொழுது தொடக்கம்? முழு விவரங்கள்! - IRCTC Tour Packages