திண்டுக்கல்: சீலப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில், தமிழ்நாடு பிரைமரி, நர்சரி, மெட்ரிகுலேஷன், மேல்நிலைப் பள்ளி மற்றும் சிபிஎஸ்இ சங்க ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. பள்ளி குழுமத் தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சங்கத்தின் செயலாலர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில், மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, “தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சிறப்பாக செயல்படுகிறது. திண்டுக்கல் அருகே கணவாய் பட்டியில் இரண்டு ஆண்டுகளாக கட்டணம் கட்டாமல், பள்ளி நிர்வாகியை மாணவரின் பெற்றோர் தாக்கியுள்ளனர். சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்ற அறிவிப்பையடுத்து, நாங்கள் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பள்ளி நிர்வாகிகளை தாக்கி, பள்ளி சொத்துகளை சேதப்படுத்துபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். எனவே, மருத்துவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் அரசு பாதுகாப்புச் சட்டம் இயற்றியது போல, தனியார் பள்ளிகள் அனைத்துக்கும் பாதுகாப்புச் சட்டத்தை அரசு இயற்ற வேண்டும். மேலும், அங்கீகாரத்துக்காக காத்திருக்கும் பள்ளிகளுக்கு உடனடியாக அங்கீகாரம் வழங்க வேண்டும்.
பத்து ஆண்டுகள் கடந்த பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரத்தை பழைய அரசாணை உத்தரவுப்படி வழங்க வேண்டும். அரசு போக்குவரத்து துறை மாணவர்களின் நலன் கருதி தனியார் பள்ளிகள் வாகனங்களை மாவட்ட எல்லைக்கும், மாநில எல்லைக்கும் சென்று வரும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும். ஆர்டிஇ (RTE - Right to education) சட்டத்தின்படி மத்திய அரசு தந்த ரூ.500 கோடியை மாநில அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.
ஆர்டிஇ சட்டத்தின் படி 12 லட்சம் மாணவர்கள் இலவசமாக தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள். டிசி இல்லாமல் மாணவர்களை வேறு பள்ளியில் சேர்ப்பது தவறாகும். இது டிக்கெட் எடுக்காமல் பஸ்ஸில் செல்வதற்கும், தேர்வுக் கட்டணம் செலுத்தாமல் தேர்வு எழுதுவதற்கும் சமமாகும். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறோம்.
தமிழக அரசுப் பள்ளிகளில் சொத்து வரி கிடையாது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா பள்ளிகளில் சொத்து வரி கிடையாது. தமிழகத்தில் தனியார் பள்ளிகளிடம் சொத்து வரியை அதிகாரிகள் மிரட்டி 150 சதவீதம் வசூலிக்கிறார்கள். இதற்கு நாங்கள் நீதிமன்றம் செல்ல இருக்கிறோம். அதுவரை தனியார் பள்ளிகளை ஜப்தி செய்வதை அதிகாரிகள் நிறுத்த வேண்டும்.
மேலும், கட்டணம் வசூலிப்பதற்கு அரசு குழு அமைத்துள்ளது. இதற்கிடையில், நீதிமன்றம் ஆர்டிஇயில் படிக்கும் மாணவர்களுக்கு கட்டணம் கூடாது என தீர்ப்பு அளித்துள்ளார்கள். இதை எதிர்த்து நாங்கள் மேல்முறையீடு செய்ய உள்ளோம். எங்கள் கோரிக்கைகளை வரும் 4ஆம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் மனு அளிக்க உள்ளோம்” இவ்வாறு அவர் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: "வரி விதிப்பது எப்படி என எங்களுக்கு தெரியும்" - மத்திய அரசை விளாசி வீடியோ வெளியிட்ட முதலமைச்சர்!