தஞ்சாவூர்: கும்பகோணம் - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில், நேற்று (ஏப்.29) மாலை பாபநாசம் வட்டம் அய்யம்பேட்டை காவல் சரகம், நெடுந்தெரு பகுதியில், தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த தனியார் கல்லூரிப் பேருந்தும், கும்பகோணம் காய்கறி அங்காடியில் காய்கறி இறக்கி விட்டு பொள்ளாச்சி நோக்கி பயணித்த லாரியும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட இந்த விபத்தில், லாரி ஓட்டுநர் திருமூர்த்திக்கு இரு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும், கல்லூரிப் பேருந்தில் பயணித்த 20 மாணவ, மாணவியர்களில் 4 மாணவியர்கள் உள்ளிட்ட 6 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதையடுத்து, அனைவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, விபத்து குறித்து தகவலறிந்து வந்த அய்யம்பேட்டை காவல் ஆய்வாளர் ஐஸ்வர்யா தலைமையிலான போலீசார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்திற்கான காரணம் என்ன என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், கும்பகோணம் - தஞ்சாவூர் மார்க்கத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும், இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படும் காரணத்தால் காவல்துறையினரும், நெடுஞ்சாலைத் துறையினரும் இணைந்து இத்தகைய விபத்துக்கள் தொடரா வண்ணம் தடுக்க, விரைந்து வேகத்தடையை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.