ஈரோடு: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து பெங்களூரு செல்வதற்காக இன்று அதிகாலை சத்தியமங்கலம் வழியாக தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ஊட்டி, மைசூரு மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த 17 பயணிகள் பயணித்த இப்பேருந்தை திருநெல்வேலி முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்த காசி(27) என்ற நபர் ஓட்டியுள்ளார்.
இந்த நிலையில், பேருந்து அதிகாலை 4 மணி அளவில் சத்தியமங்கலம் அடுத்துள்ளஅத்தியப்ப கவுண்டன்புதூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்ததால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த தார் இயந்திரம் மீது மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் இந்த விபத்து குறித்து உடனடியாக சத்தியமங்கலம் போலீசாருக்கும், 108 ஆம்புலன்ஸுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பேருந்தில் சிக்கிய 17 பயணிகளையும், அப்பகுதியினர் உதவியுடன் பாதுகாப்பாக மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது, பேருந்தில் இருந்த பயணிகள் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏதும் ஏற்படாததால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், இந்த எதிர்பாராத விபத்தில் இருந்து பயணிகள் அனைவரும் வெறும் காயங்களுடன் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த சத்தியமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் ஏற்பட்ட இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.