சேலம்: ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்ற நிலையில், கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பேருந்து ஒன்று 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்தனர்.
அதனால் ஏற்காட்டிற்கு வரும் பேருந்துகள், வாகனங்கள் அனைத்தும் போலீசாரின் தீவிர சோதனைக்குப் பிறகு மலையேற அனுமதிக்கப்படுகின்றன. அதாவது வாகன ஓட்டுநர்களின் தகுதி மற்றும் வாகனங்கள் எத்தனை ஆண்டுகள் இயக்கப்பட்டு வருகின்றது உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பேருந்துகளை இயக்கிப் பார்த்து தகுதியுடையதாக உள்ளதா என சேலம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன் ஆய்வு மேற்கொண்டார். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஏற்காட்டிற்கு தினமும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் என 15 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த விபத்தின் எதிரொலியாக, இன்று (மே 4) ஏற்காட்டிற்குச் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. ஒவ்வொரு பேருந்தையும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன் இயக்கிப் பார்த்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து போக்குவரத்து அலுவலர் தாமோதரன் கூறுகையில், "இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 15 பேருந்துகளில் 13 பேருந்துகள் அரசுப் பேருந்து, இரண்டு பேருந்துகள் தனியார் பேருந்து. அரசுப் பேருந்துகள் மலைப்பாதைகளில் பயணிக்கும் வகையில் தகுதியுடையதாக உள்ளன. தனியார் பேருந்துகளில் சிறு சிறு குறைபாடுகள் உள்ளன. அதனை சரி செய்வதற்கு அறிவுறுத்தியுள்ளோம். மேலும், இது போன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மனைவியை அழைத்து வரச் சென்ற கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ஜோலார்பேட்டையில் பயங்கரம்! - Husband Bike Set Fire