திருச்சி: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் கூட்டம், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அதன் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் 234 அரசாணையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியருக்கான ஊதியத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் அனைத்தையும் மாற்றி அமைத்து, மத்திய அரசுக்கு இணையாக தமிழக அரசு ஊதியம் வழங்க வேண்டும், 42 அரசாணை பின்பற்றி ஊக்க ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் பொதுச் செயலாளர்கள் ராஜேந்திரன், வின்சென்ட் பால்ராஜ், இரா.தாஸ், சேகர், இலா.தியோட ராபின்சன், சண்முகநாதன், முத்துராமசாமி, மாநிலத் தலைவர் ரக்ஷிதா, உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் சுழல் முறை தலைவர் ராஜேந்திரன், “தமிழக அரசு 243 என்ற அரசாணையைப் பிறப்பித்து, தொடக்கக் கல்வியில் பணிபுரியும் 90 சதவீத ஆசிரியர்களுக்கு மனவேதனையை உண்டாக்கியுள்ளது. எனவே, அந்த அரசாணை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்யும் பொழுது, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
வரும் 31ஆம் தேதிக்குள் இந்த கோரிக்கை நிறைவேற்றாவிட்டால், செப்டம்பர் 1ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அடையாள வேலை நிறுத்தத்தின் ஆயத்தக் கூட்டம் நடைபெறும். இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 10ஆம் தேதி அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும். தொடர்ந்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
எனவே, உடனடியாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அல்லது அமைச்சர் இது குறித்து தங்களை அழைத்துப் பேச வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்ட போராட்டத்திற்கு ஆசிரியர் அமைப்புகள் தள்ளப்படும். வரும் 29, 30 மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதிகளில் சென்னையில் கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: “விஜய் எங்கள் சமுதாயம்”.. விஜய்க்கு முதல் ஆதரவு தெரிவித்த அமைப்பு.. வெ.மு.க கூறுவது என்ன?