சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். தொடர்ந்து, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி துரைசாமி ஓய்வு பெற்றார்.
இதனையடுத்து மூத்த நீதிபதியான டி.ராஜா, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த டி.ராஜா கடந்த 2023 மே 24ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, அடுத்த மூத்த நீதிபதியாக இருந்த எஸ்.வைத்தியநாதன், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த S.V. கங்காபூர்வாலா சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டார். கடந்த 2023ம் ஆண்டு முதல் தலைமை நீதிபதியாக உள்ள நீதிபதி கங்காபூர்வாலா மே 23ம் தேதி ஓய்வு பெறவுள்ளார்.
இதையடுத்து புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்படும் வரை சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக உள்ள மகாதேவன் பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், மத்திய சட்டத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீதிபதி மகாதேவினை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் மே 24ம் தேதியில் இருந்து அவர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக செயல்படுவார்" எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த ஆர்.மகாதேவன்? கடந்த 1963 அன்று சென்னையில் பிறந்த ஆர்.மகாதேவன், மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டப்படிப்பை முடித்து 1989ம் ஆண்டு முடித்து வழக்கறிஞராக பணியில் தொடர்ந்தார். மறைமுக வரிகள், சுங்கம் மற்றும் மத்திய கலால் வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற மகாதேவன், சிவில், கிரிமினல் மற்றும் ரிட் வழக்குகளிலும் 25 ஆண்டுகள் பயிற்சி பெற்றார்.
அவர் தமிழக அரசின் கூடுதல் அரசு வழக்கறிஞராக (வரிகள்) பணியாற்றினார். மேலும், மத்திய அரசின் கூடுதல் நிலை வழக்கறிஞராகவும், இந்திய அரசின் மூத்த குழு வழக்கறிஞராகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி 9000க்கும் மேற்பட்ட வழக்குகளைத் திறம்பட நடத்தினார்.
கடந்த 2013ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 10 ஆண்டுகளில் உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், புகழ்பெற்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்த குடியரசுத்தலைவர், மே 24ம் தேதி முதல் பொறுப்பேற்றுச் செயல்படுவார் எனவும் அறிவித்துள்ளார்.
முக்கிய தீர்ப்பு: கோவில் பாதுகாப்பு மற்றும் சிலைகடத்தல் தடுப்பு தொடர்பாக 75 அறிவுறுத்தல்களைத் தமிழக அரசு கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். தமிழகத்தில் பிராதான கோவில் சிலை கடத்தப்படுவது தடுக்கப்பட்டதற்கு நீதிபதி மகாதேவன் அமர்வு பிறப்பித்த உத்தரவும் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னையில் பைக்கில் எடுத்துச் சென்ற ரூ.94 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்!