சென்னை: மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜய்காந்த்திற்கு மத்திய அரசால் வழங்கப்படும் பத்மபூஷன் விருது டெல்லியில் வழங்கப்பட உள்ளது. அதனைப் பெற, நேற்று டெல்லி புறப்பட்ட தேமுதிக பொதுச் செயலாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய பிரேமலதா விஜய்காந்த், "பத்மபூஷன் விருதைப் பெற்றுக் கொண்டு வரும் 10ஆம் தேதி டெல்லி தமிழ் சங்கம் சார்பில் நடத்தப்படும் பாராட்டு விழாவில் கலந்து கொள்ள உள்ளோம். பல கட்டங்களாக விருதுகள் வழங்கப்படுவதால், கடந்த முறை கிடைக்கவில்லை. 9ஆம் தேதி நடைபெறும் விருது விழாவில் பெயர் இடம்பெற்றுள்ளதால் பெற்றுக் கொள்கிறோம்.
விவசாயிகள் ஒருபுறம் தண்ணீர் பற்றாக்குறையாலும், மறுபுறம் பலத்த காற்றால் நெற்பயிர்கள் அழிந்து போகும் நிலையிலும் அவதியில் உள்ளனர். மூன்றாண்டு கால திமுக ஆட்சியில் மக்கள் சந்தோஷமாக இருப்பதாக கூறும் முதலமைச்சர், மக்களை நேரடியாகச் சந்தித்து சந்தோஷமாக இருக்கிறார்களா எனப் பார்த்தாரா? ஏழையின் சிரிப்பில் தான் இறைவனைக் காண முடியும் என்பார்கள். ஏழையின் சிரிப்பு என்பது விவசாயிகள் தான். ஆனால், ஒட்டுமொத்த விவசாயிகளும் வறுமையில் உள்ளனர்.
பத்திரப்பதிவு சேவை வரியை யாரிடமும் அறிவிக்காமல் உயர்த்தியுள்ளனர். வரி என்பது மக்களுக்கு வலி இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால், இங்கு சொத்து வரி, பால் கட்டணம், பேருந்து கட்டணம் உட்பட அனைத்து வரிகளும் உயர்வதால், மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. நீட் விலக்கிற்காக 50 லட்சம் கையெழுத்தைப் பெற்று விட்டதாகக் கூறிய உதயநிதி ஸ்டாலின், நீட்டை ரத்து செய்து விட்டாரா? தற்போது வரை நீட் தேர்வு நடந்து கொண்டுதான் உள்ளது. அரசியலுக்காக மட்டுமே வாக்குறுதிகளைக் கொடுக்கின்றனர்.
கேப்டன் உயிருடன் இருக்கும்போதே பத்மபூஷன் விருது கொடுக்காமலிருந்தது வலிதான். அவர் இருக்கும்போதே இவ்விருதை வாங்கியிருந்தால், ஒட்டுமொத்த தமிழர்களுக்கான பெருமையாக இருந்திருக்கும். மேலும், இந்தியாவின் அனைத்து விருதுகளையும் பெறக்கூடிய தகுதி வாய்ந்தவர் கேப்டன் விஜயகாந்த் மட்டும் தான். பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டாலும், ஒட்டுமொத்த மக்களுக்காக அதனை சமர்ப்பிப்போம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதுரை ஸ்ட்ராங் ரூம்: பழுதான சிசிடிவி கேமராக்கள் -மாவட்ட ஆட்சியர் சொல்வது என்ன?