திருப்பூர்: உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள குழிப்பட்டி மலைவாழ் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் சாலை வசதி கேட்டு தமிழ்நாடு அரசிடம் கோரிக்கைகள் வைத்திருந்தாலும், இன்று வரை மலைக்கிராமங்களுக்கு சாலை வசதிகள் எதுவும் ஏற்படுத்தி தரவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனால் அவர்கள் காடு, மலைவழிப் பாதைகளில் கரடு, முரடான இடங்களில் நடந்தே செல்லும் நிலை உள்ளது. விபத்து, மகப்பேறு உள்ளிட்ட அவசர நிகழ்வுகளுக்கு மருத்துவமனைக்குச் செல்வது என்பது இந்த பகுதி மலைவாழ் மக்களுக்கு மிகவும் கடினமானதாகவே இருந்து வருகிறது. இங்கு சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கியும் பணிகள் தொடங்காமல் இழுபறியாக இருப்பதால், அப்பகுதி பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், குழிப்பட்டியைச் சேர்ந்தவர் நாகம்மாள் (22). 8 மாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பிரசவ வலியால் துடித்த நாகம்மாளை, குழிப்பட்டியில் இருந்து பொன்னாலம்மன் சோலை வழியாக மலை அடிவாரத்திற்கு மலைக்கிராமத்தைச் சார்ந்த ஆண்கள், தொட்டில் கட்டி தூக்கிச் சென்று எரிசினம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது, நாகம்மாளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, பல ஆண்டுகளாக தாங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதால், வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கர்ப்பணியை தொட்டில் கட்டி தூக்கிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.