சிவகங்கை: காளையார்கோவில் பாண்டியன் கோட்டையில் பானை குறியீடுகள், ஓட்டுக்கீறல்கள், எலும்பாலான முனைக்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை தொல்நடைக்குழு தகவல் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவநர் புலவர் கா.காளிராசா, தலைவர் நா.சுந்தரராஜன், செயலர் இரா. நரசிம்மன், கள ஆய்வாளர் சரவணன், உறுப்பினர் காளீஸ்வரன் ஆகியோர் காளையார் கோவில் பாண்டியன் கோட்டை பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது மேற்கண்ட தொல்லியல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து புலவர் காளிராசா செய்தியாளர்களிடம் கூறியதாவது," திருக்கானப்பேர் என்னும் காளையார் கோவிலில் சங்க கால கோட்டை, பாண்டியன் கோட்டை என்று வழங்கப்படுகிறது. இக்கோட்டையைச் சுற்றி அகழியுடனும், நடுவில் நீராவி குளத்துடனும் மண் மேடாக 37 ஏக்கரில் இன்றும் காட்சி தருகிறது. கானப்பேர் பாண்டியன் கோட்டை பற்றிய செய்தி, புறநானூற்றில் 21ஆவது பாடலில் இடம்பெற்றுள்ளது.
இப்பகுதியை குறுநில மன்னனான வேங்கை மார்பன் ஆட்சி செய்ததும், அவனது கோட்டையை பாண்டியன் உக்கிரப் பெருவழுதி வெற்றி பெற்றதும், அக்கோட்டையின் சிறப்புகளும் பாடலில் இடம் பெறுகின்றன. இலக்கியத்தின் சான்றாக இன்றும் இக்கோட்டை காணப்படுகிறது. மேட்டுப்பகுதி முழுதும் பானை ஓடுகள் பெருமளவில் சிதறிக் கிடக்கின்றன.
சிவகங்கை தொல்நடைக் குழு அவ்வப்போது இக்கோட்டைப் பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வு செய்து வருகிறது. அதில் தொடர்ச்சியாக பழமையான பொருட்கள் கிடைத்து வருகின்றன. வட்டச் சில்லுகள், மேற்கூரை ஓட்டு எச்சங்கள், சங்க கால செங்கல் எச்சங்கள் தொடர்ச்சியாக கிடைத்துள்ளன.
மேலும், பானை ஓட்டுக்கிறல்கள், குறியீடுகள் கிடைத்ததோடு, 2000 ஆண்டுகளுக்கும் பழமையான தமிழி எழுத்தில் மோசிதபன் என்று எழுதப்பட்ட பானை ஓடும், நெசவுக்கு பயன்படுத்தப்பட்ட எலும்பாலான முனையுடைய கருவி ஒன்றும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
பானை ஓட்டு குறியீடுகள்: இந்நிலையில், தற்போது மேற்கொண்ட மேற்பரப்பு கள ஆய்வில், பானை குறியீடுகள், கீறல்கள் கிடைத்துள்ளன. இவை எழுத்தறிவுக்கு முன்பிருந்தும், எழுத்தறிவு பெற்ற பிறகும் தொடர்ச்சியாக பயன்படுத்தப்படுகின்றன. இன்றும் நம்மிடையே குறியீடுகள் பொறிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. முக்கோண வடிவிலான குறியீடு, சதுர வடிவிலான குறியீடு சிதைவுற்ற வடிவில் கிடைத்துள்ளன. க,ண போன்ற தமிழி எழுத்து வடிவமுடையது போன்ற பானையோடு கிடைத்து இருந்தாலும் தொல்லியல் அறிஞர்களின் மேலாய்வில் அது குறியீடாகவே கருதப்படுகிறது.
எலும்பாலான கருவி முனை: சங்க காலத்திலேயே நமது முன்னோர்கள் நெசவு உள்ளிட்ட தொழில்களுக்கு நுட்பமான பல கருவிகளையும் பயன்படுத்தியுள்ளனர். தற்போது கிடைத்து இருக்கக்கூடிய எழும்பாலான கருவி முனையின் முனைப்பகுதி சற்று சேதமடைந்துள்ளது.
இவ்விடத்தில் அகழாய்வு செய்ய தொல்லியல் துறை அமைச்சர் விண்ணப்பம் வழங்கியதின் வழி, தொல்லியல் துறை கள மேலாய்வு செய்து முன்னுரிமை அடிப்படையில் அகழாய்வு செய்யப்படும். இவ்விடத்தின் பழமையை அறிந்து கொள்ளவும், பாதுகாக்கவும் தொல்லியல் துறை அடுத்து வரும் ஆண்டுகளில் அகழாய்வு செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம்” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: மாஞ்சோலை விவகாரம்; விருப்பமில்லாமல் விஆர்எஸ்-ல் கையெழுத்து போட்டோம்.. தொழிலாளர்கள் வேதனை!