மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுர ஆதீன திருமடம் உள்ளது. சைவத்தையும் தமிழையும் வளர்க்கும் இவ்வாதீனத்தில் உள்ள ஶ்ரீ ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா, குரு முதல்வரின் குருபூஜைவிழா மற்றும் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் பட்டிணப்பிரவேச விழா கடந்த 20 ஆம் தேதி ஶ்ரீ ஞானபுரீஸ்வரர் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்களாக நடைபெற்று வந்தது.
11 ஆம் நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தருமபுர ஆதீன மடாதிபதி சிவிகை பல்லக்கில் எழுந்தருள பக்தர்கள் சுமந்து செல்லும் 'பட்டணப்பிரவேச விழா' நேற்றிரவு கோலாகலமாக நடைபெற்றது. தருமபுர ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், திரு ஆபரணங்கள் பூண்டு தங்க கொரடு, பாதரட்சை அணிந்து திருக்கூட்ட அடியவர்கள் புடைசுழ சிவிகை பல்லக்கில் எழுந்தருளினார். தொடர்ந்து, சிவிகை பல்லக்கினை கோடி நாட்டாமைகள் நான்கு பேர் தலைமையில் 70 பேர் தோளில் சுமந்து சென்றனர்.
அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், ஒட்டகம் உள்ளிட்ட பரிவாரங்களுடன், நாதஸ்வர மேளதாளங்கள், சிவ கைலாய வாத்தியம், மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் சிவனடியார்கள், பக்தர்கள் புடைசூழ தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் அமர்ந்து பூரணகும்ப மரியாதையுடன் வீதியுலா வந்தார்.
இவ்விழாவில் சைவ ஆதீனங்களான மதுரை ஆதீனம், செங்கோல் ஆதீனம், சூரியனார்கோயில் ஆதீனம், தொண்டை மண்டல ஆதீனம், உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர். பட்டணப்பிரவேசம் முடிவடைந்து ஆதீன மடாதிபதி ஞான கொலுக்காட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
இறுதியாக ஆதீன மடாதிபதியின் ஞான கொலுக்காட்சி நள்ளிரவு நடைபெற்றது. பீடத்தில் அமர்ந்த ஆதீன மடாதிபதிக்கு திருப்பனந்தாள் காசி மடத்து இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிராயன் சுவாமிகள் பாவனை அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பித்தார். இறுதியாக விழாவில் பங்கேற்ற ஆதீனங்களுக்கு சூரியனார்கோயில் ஆதீனம், திருப்பனந்தாள் இளவரசு உள்ளிட்டவர்களுக்கு தருமபுரம் ஆதீன குருமா சன்னிதானம் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
2022-ல் மனிதனே மனிதனை சுமந்து செல்வது 'மனித உரிமை மீறல்' எனக் குற்றம்சாட்டி திராவிடர் கழகம், விசிக, கம்யூனிஸ்ட் இயக்கங்கள், இன்னும் பிற அமைப்புகள் இணைந்து இவ்விழாவிற்கு எதிராக போராட்டத்தில் குவித்தன. இதையடுத்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி தடை விதித்திருந்தார். இதையடுத்து பல கட்ட எதிர்ப்புகளு பின்னர் நடந்த இந்த நிகழ்ச்சிக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதையும் படிங்க: 'ஜெயலலிதாவிற்கு 'இந்துத்துவா' மீது நம்பிக்கை..ஜூன் 4-க்கு பின் ராகுல் காந்தியின் அரசியல்..' - எல்.முருகன் - L Murugan